2 கிளைமாக்ஸ் உள்ள பாரதிராஜா படம் எதுன்னு தெரியுமா? அடடே அதுவா? சூப்பர்ஹிட்டாச்சே!
இயக்குனர் இமயம் என்று தமிழ்சினிமா உலகில் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் மண் மணம் கமழும் கிராமியக் கதைகளை வெகு அழகாக எடுப்பதில் வல்லவர். அந்த வகையில் இவர் எடுத்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள், கல்லுக்குள் ஈரம், மண்வாசனை, காதல் ஓவியம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இவரது படைப்பில் கிழக்குச்சீமையிலே படத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் 1993ல் வெளியானது. விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ், பாண்டியன் என ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.
படத்தில் காமெடியனாக வடிவேலு நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம். இளையராஜா எப்படியோ இந்தப் படத்தில் மிஸ் ஆகி விட்டார். இருந்தாலும் ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ரகங்கள். மானூத்து மந்தையிலே, ஆத்தங்கரை மரமே, எதுக்கு பொண்டாட்டி, தென்கிழக்கு சீமையிலே, கத்தாழைக் காட்டு வழி ஆகிய பாடல்கள் உள்ளன.
படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் காட்சிக்குக் காட்சி படத்தின் கூடவே பயணிக்க வைத்து இருப்பார் பாரதிராஜா. திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். உறவுகளுக்குள் வரும் விரிசல்கள், மனஸ்தாபங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.
அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வணிகரீதியாக பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலைப் பார்க்கலாமா...
கிழக்குச்சீமையிலே படத்துல 2 கிளைமாக்ஸ்னு சொல்லலாமா... ஏன்னா பாண்டியனை வந்துட்டு ராதிகா மகள் பிடிவாதத்தை விட்டுட்டு மாமான்னு கூப்பிடுவாங்க. அது ஒரு கிளைமாக்ஸ். 2வது கிளைமாக்ஸ் ராதிகா பேசக்கூடிய விஷயங்கள். இந்த கிளைமாக்ஸ் போர்ஷனை யார் பிளான் பண்ணினாங்க? அது எப்படி எடுக்கப்பட்டது? இல்லன்னா ரீஷூட் பண்ணப்பட்டதா? இதைப்பற்றி சொல்ல முடியுமான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
பாரதிராஜாவைப் பொருத்தவரைக்கும் திரைப்படத்தை ஆரம்பிக்குறதுக்கு முன்னால அந்தக் கதையைப் பற்றி விவாதிப்பார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் மறுநாள் என்னென்ன காட்சியை எடுக்கப்போறாரோ அதைப் பற்றி உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள் என எல்லாரிடமும் விவாதிப்பதுதான் அவரது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு விவாதத்தின்போது அமைந்ததுதான் அந்த கிளைமாக்ஸ் ஏரியா. அந்தக் காட்சிக்கான வசனங்களை மிகச்சிறப்பாக எழுதியது அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவான ரத்னகுமார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.