மசூதியில் இந்து முறைப்படி திருமணம் - பாராட்டுகளை குவிக்கும் கேரளா

மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற சம்பவம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

By :  adminram
Update: 2020-01-20 06:40 GMT

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோட்பாடுகள், விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் உண்டு. ஆனால், சில நேரம் அவை மீறப்படுவதும் உண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வசித்து வருபவர் அஞ்சு. தந்தையை இழந்த அஞ்சுவிற்கு 2 சகோதரிகள் உண்டு. பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த அஞ்சுவின் தாய் தனது மகள் திருமணத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடினார்.

இதை பரிசீலித்த மசூதி நிர்வாகம் நிதியுதவி செய்ய முன் வந்ததோடு, திருமணத்தை மசூதியிலேயே நடத்திக்கொள்ளவும் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அஞ்சுவிற்கும், சரத் என்கிற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்பின், தென்னை குலைகள், வாழை மரங்கள் கட்டப்பட்டும், பந்தல் போடப்பட்டும் மசூதியே திருமணகோலம் பூண்டது. நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் இந்து முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு திருமணம் நடந்து முடிந்ததது.

அதோடும் நின்றுவிடாமல் மசூதி நிர்வாகம் சார்பில் மணப்பெண்ணுக்கு 10 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சமும் ரொக்கமாக வழங்கப்பட்டது. அதோடு, திருமணத்தில் பங்கேற்ற ஆயிரம் பேருக்கு சைவ உணவையும் மசூதி நிர்வாகமே ஏற்பாடு செய்தது.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி பாராட்டை பெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் அடைந்துள்ளார். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கும் நிலையில், அதுபோன்ற தடைகளை உடைக்க மக்கள் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.