ஹைட்ரோ கார்பனை மறக்கடித்த ரஜினி பேட்டி - திட்டமிட்ட ராஜதந்திரமா?

தமிழகத்தை பொறுத்தவரை ரஜினி பேட்டி கொடுத்தாலும் செய்தி. கொடுக்காவிட்டாலும் செய்திதான். அதோடு, அவர் கூறும் சில கருத்துகள் கடும் எதிர்ப்பை பெற்று சர்ச்சையாக மாறுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

By :  adminram
Update: 2020-01-22 06:25 GMT

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய ரஜினி ‘கையில் முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்’ எனப்பேசினார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கு உள்ளானது.

மேலும், 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமன் மற்றும் சீதை சிலைகள் நிர்வானமாக எடுத்து செல்லப்பட்டு தி.க கட்சியினரால் செருப்பால் அடிக்கப்பட்டது எனவும், அதை யாரும் எழுதாத நிலையில் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் சோ தனது துக்ளக் பத்திரிகையில் எழுதியதாகவும் ரஜினி பேசியிருந்தார். ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திகவினர் கூறினார். ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்து விட்டார்.

எனவே, நேற்று காலை முதலே சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரமே விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக அவரின் ரசிகர்கள் ஒருபுறமும், ரஜினிக்கு எதிராக பலரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இதற்கிடையே தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தை நசுக்கும் செய்யும் அறிவிப்பை ஆளும் பாஜக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பான் வாயுவை எடுக்க மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கான விதியை பாஜக அரசு மாற்றியுள்ளது. அதாவது, ஹைட்டோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற தேவையில்லை. மேலும், மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கும். தொலைக்காட்சி விவாதங்களிலும் இந்த விவாகரமே அதிகம் பேசப்பட்டிருக்கும். ஆனால், ரஜினி கொடுத்த ஒரு பேட்டியால் தற்போது இந்த விவகாரமே பெரும் பொருளாக மாறி, ஹைட்ரோ கார்பன் விவகாரத்தை இருட்டடிப்பு செய்து விட்டது. எனவே, ரஜினியின் பேட்டிக்கு பின்னால் எதாவது திட்டமிடல் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.