முரசொலி - பெரியார் : ரஜினிக்கு ஏன் இந்த கோபம்?.. பின்னணி இதுதான்...

முரசொலி குறித்து ரஜினி பேசியதற்காக பின்னணி தெரியவந்துள்ளது.

By :  adminram
Update: 2020-01-22 07:54 GMT

கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவரோடு இணக்கம் காட்டியவர்தான் ரஜினி. ஆனால், கடந்த சில மாதங்களாகவே திமுகவிற்கும், ரஜினிக்கும் இடையே உரசல் அதிகாகியுள்ளது. குறிப்பாக முரசொலி வைத்திருந்தால் திமுக காரர்.. துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தி.க. மற்றும் திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு விடாமல், 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமன் மற்றும் சீதை சிலைகள் நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டு தி.க கட்சியினரால் செருப்பால் அடிக்கப்பட்டது எனவும், அதை யாரும் எழுதாத நிலையில் பத்திரிக்கையாளர் சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் எழுதியதாகவும் ரஜினி பேசியிருப்பது சர்ச்சையையும், கடும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திகவினர் போராட்டத்தை துவக்க, ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்து விட்டார்.

திமுக மற்றும் முரசொலி குறித்து ரஜினி இப்படி பேசியதற்கு பின்னணியாக பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் பணம் பதவி எதிர்பார்ப்பவர்கள் மன்றத்தில் இருந்து விலகி விடுங்கள் என ரஜினி தரப்பில் ஒரு அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து ‘ ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப். மே... மே.. மே..’ என்கிற தலைப்பில் முரசொலியில் கட்டுரை வெளியானது. இது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் ரஜினிக்கும் தெரியவர, ஸ்டாலினின் அறிவுரையால் முரசொலி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பேரணி அறிவித்த போது ‘ நடக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை தருகிறது’ என ரஜினி டிவிட் போட்டார். அதைத்தொடர்ந்து ‘குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கேற்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்'' என உதயநிதி டிவிட் போட்டார்.

ரஜினியின் பெயரை உதயநிதி குறிப்பிடவில்லை என்றாலும், அவரைத்தான் அவர் கூறுகிறார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படி தொடர்ந்து முரசொலி மற்றும் உதயநிதி தரப்பில் கிண்டலடிக்கப்பட்டது ரஜினிக்கு உள்ளுக்குள் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த கோபத்தையே அவர் துக்ளக் விழாவில் வெளிப்படுத்திவிட்டதாக அவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.