30 வருஷம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?!.. இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி...
80களில் தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அப்போது உருவான 95 சதவீத திரைப்படங்கள் இளையராஜாவின் பாடல்களையும், பின்னணி இசையையும் நம்பி இருந்தன. ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரிக்க நினைத்தால் நடிகர், நடிகைகளின் கால்ஷூட்டை வாங்குவதை விட முதலில் இளையராஜாவிடம் சொல்லி அந்த படத்தில் இசையமைக்க அவரின் சம்மதத்தை வாங்கி விடுவார்கள்.
ஏனெனில் இளையராஜா இசை என்றால் அந்த படம் வியாபாரம் ஆகிவிடும். அதோடு படம் வெற்றி பெறுவதோடு, பாடல்கள் ஹிட்டாகி ஆடியோ கேசட் மூலமும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். எனவே அப்போதைய முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இளையராஜாவை நம்பி இருந்தார்கள். இளையராஜாவும் தனது இனிமையான பாடல்கள் மூலம் அந்த திரைப்படங்களின் வெற்றிக்கு உதவினார்.
கடந்த சில வருடங்களாகவே 80ககளில் இளையராஜா இசையமைத்த ஹிட் பாடல்களை பல இயக்குனர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வருகிறார். தனது அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கூலி, குட் பேட் அக்லி போன்ற பல படங்களும் இந்த பிரச்சனையை சந்தித்தது.
அதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி ஹிட்டடித்த டியூட் படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் ஆகிய இரண்டு படங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்தும் இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரண்டு பாடல்களையும் படத்திலிருந்து நீக்குமாறு அவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ‘30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்?.. படம் தியேட்டர்களிலும். ஓடிடியிலும் வெளியான போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது வந்து வழக்கு தொடர்வது ஏன்/’ என நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.