அந்த ஒரு வார்த்தைய சொல்ல 51 டேக்கா? டிராகன் படத்தில் கிளாப்ஸ் வாங்கிய சீன்
வெற்றி நடை போடும் டிராகன்: சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் திரைப்படம் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு, சினேகா, கே.எஸ்.ரவிக்குமார், தேனப்பன், ஃபேட் மேன் ரவீந்திரன், ஜார்ஜ் மரியோன் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். நகைச்சுவை மிக்க செண்டிமெண்ட்டான படமாக டிராகன் படம் அமைந்தது.
படிப்பு முக்கியம்: படத்தின் மையக்கருத்தே படிப்புதான். வாழ்க்கையில் சில பேர் படிக்காமல் பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்கள். ஆனால் படித்தால் அந்த இடத்தை சீக்கிரம் அடைய முடியும் என்பதை விளக்கும் படம்தான் டிராகன். 12ஆம் வகுப்பில் 98 சதவீதம் மார்க் வாங்கிய ஒரு பையன் கல்லூரிக்கு நுழையும் போது கெத்துதான் முக்கியம் என கருதி படிப்பை தூசி போல் நினைக்கிறான்.
பெற்றோரை ஏமாற்றும் ஹீரோ: தன்னுடைய கெத்தை எக்காரணத்துக்கொண்டும் விடக்கூடாது என தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறான். ஒரு கட்டத்தில் ஜாலியான லைஃபை அடைய பல குறுக்குவழிகளை தேர்ந்தெடுக்கிறான். அதற்காக தப்பு மேல தப்பு செய்து கொண்டே போக ஒரு நாள் அந்த தப்பு வெளியே தெரிகிறது. போலீஸில் சரணடைகிறான். மீண்டும் படிப்புதான் முக்கியம் என உணர்ந்து கொள்கிறான்.
ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு குழந்தையும் பார்க்க வேண்டிய படம்தான் டிராகன். படம் ஆரம்பிக்கும் போது அப்படி இப்படி என இருந்தாலும் போக போக படம் சூடுபிடிக்கிறது. காமெடிக்கு பஞ்சமில்லை. படம் இறுதிவரை சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மொத்த அரியர் பேப்பரையும் கிளியர் பண்ண வேறு வழி இருக்கிறதா என பிரதீப் ரவீந்திரனிடம் கேட்பார்.
படிப்புதான்: அதற்கு ரவீந்திரன் அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக முயற்சி செய்ய தோல்வியில் முடிகிறது. வேறு என்னதான் வழி என பிரதீப் கேட்க அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது என ரவீந்திரன் கூறுவார். என்ன வழி சொல்லுங்க சார் என பிரதீப் கேட்பார். அதற்கு ரவீந்திரன் ‘அதுக்கு நீ படி’ என சொல்வார். இந்த படி என்ற வார்த்தையை டப்பிங்கில் பேசும் போது 51 டேக் எடுத்தாராம் ரவீந்திரன்.
ரவீந்திரனுக்கே ஒரே எரிச்சலாகிவிட்டதாம். இந்த வார்த்தைக்கு ஏன் இந்த பாடு படுத்துறான் இந்த இயக்குனர் என்றெல்லாம் யோசிச்சிருக்கிறார் ரவீந்திரன். ஆனால் தியேட்டரில் வந்து பார்க்கும் போதுதான் தெரிந்ததாம் படினு சொன்னதும் அத்தனை பேரும் கைத்தட்டியிருக்கிறார்கள். இதை ரவீந்திரன் ஒரு பேட்டியில் கூறினார்.