இதெல்லாம் சமுத்திரக்கனி வாய்ஸா? யாருக்கெல்லாம் டப்பிங் பேசியிருக்காரு பாருங்க?
இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான கலைஞராக போற்றப்படுபவர் நடிகர் சமுத்திரக்கனி. தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படு பிசியான நடிகராக திகழ்ந்து வருகிறார். பாலச்சந்தரின் நூறாவது படமான ‘பார்த்தாலே பரவசம். படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சமுத்திரக்கனி. அதில் ஏற்பட்ட நட்பால் அண்ணி சீரியலை இயக்கி வந்த பாலச்சந்திரனுடன் அந்த சீரியலிலும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
இந்த ஒரு அனுபவம் தான் அடுத்ததாக சன் டிவியில் ராதிகாவை வைத்து சீரியலை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. ‘அரசி’ சீரியலை சமுத்திரக்கனிதான் இயக்கினார். அதைத் தொடர்ந்து செல்வி சீரியலையும் சமுத்திரக்கனிதான் இயக்கினார். அதுவரை சமுத்திரக்கனி என்ற ஒருவரை யாருக்குமே தெரியாது. ராதிகா நடித்து புகழ்பெற்ற சீரியலான அரசி, செல்வி இந்த சீரியல்கள் மூலம் சமுத்திரக்கனியின் பெயரும் மெல்ல மெல்ல வெளியில் தெரிய ஆரம்பித்தது.
சீரியலில் ஒரு வெற்றி இயக்குனராக இருந்து வந்த சமுத்திரக்கனிக்கு சினிமாவிலும் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அதனால் சேரனை வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் அப்படியே டிராப்பானது .அதைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவை ஹீரோவாக வைத்து உன்னை சரணடைந்தேன் என்ற ஒரு படத்தை இயக்கினார் .இருந்தாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை .
இப்படி அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வந்த சமுத்திரக்கனிக்கு அவர் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. அதனால் பருத்திவீரன் படத்தில் அமீருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அந்த ஒரு அனுபவம் தான் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடிக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் வாழ்க்கை ஒரே ஏறுமுகம் தான்.
அதிலிருந்து இன்று வரை சமுத்திரக்கனி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நடிகர் என்று ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகராக இயக்குனராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து இருக்கிறார் சமுத்திரக்கனி. அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். பசங்க படத்தில் சூர்யா ஒரு கேரக்டரில் சமுத்திரக்கனியை நடிக்க அழைத்திருக்கிறார் .
அந்த நேரத்தில் தான் நாடோடிகள் படத்தில் பிஸியாக இருந்தாராம் சமுத்திரக்கனி. அதனால் முடியாது என மறுத்துவிட்டார். அதனால் அந்த படத்தில் நடிகர் ஜே பி நடித்திருக்கிறார். அவருக்கு அந்த படத்தில் டப்பிங் கொடுத்தது சமுத்திரக்கனிதானாம். அதைத்தொடர்ந்து ஆடுகளம் படத்தில் கிஷோர் நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சமுத்திரக்கனி. அந்தப் படத்தின் போதும் நாடோடிகள் பட சூட்டிங்கில் இருந்திருக்கிறார்.
அதனால் கிஷோர் கேரக்டருக்கு டப்பிங் பேசியதும் சமுத்திரக்கனிதானாம். அதன் பிறகு தோனி படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு டப்பிங் கொடுத்ததும் சமுத்திரக்கனி. அதேபோல கோலி சோடா படத்தில் மதுசூதனனுக்கு டப்பிங் கொடுத்ததும் இவர்தான். அதைத்தொடர்ந்து மீண்டும் மது சூதனனுக்கு கதகளி படத்தில் டப்பிங் பேசியதும் சமுத்திரகனிதான். இதன் பிறகு எந்த படங்களுக்கும் டப்பிங் கொடுக்கவில்லை என்று சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் கூறினார்.