என்னை விட பத்துமடங்கு சம்பளம் சூரிக்கு.. ‘விடுதலை’ புரோமோஷனில் VJS சொன்ன தகவல்
விடுதலை:
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. சொற்ப படங்களை இயக்கியிருந்தாலும் காலம் காலமாக ரசிகர்களின் மனதில் அந்த படம் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படி ஒரு படம் தான் விடுதலை. சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கிய வெற்றிமாறன் அந்த படம் வெளியாகி வசூல் ரீதியிலும் விமர்சன அரிதியிலும் நல்ல ஒரு வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி. இதற்கு கூடுதல் பலமாக இருந்தது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் தான். முதல் படத்தின் மாபெரும் வெற்றி இரண்டாம் படத்தையும் எதிர்பார்க்க ஆர்வத்தை தூண்டியது.
மஞ்சு வாரியாரின் நடிப்பு:
அந்த வகையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தில் மஞ்சு வாரியாரும் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியாரை பொருத்தவரைக்கும் தமிழில் அவர் நடித்த அசுரன், துணிவு ,சமீபத்தில் வெளியான வேட்டையன் போன்ற திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து விடுதலைப் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தான் சூரிக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் என்று சொல்லலாம். அதற்கு முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகராகவே தமிழ் மக்கள் மனதில் பேசப்பட்டு வந்தார் சூரி. ஆனால் அவரை கதாநாயகனாக்கி இன்று உலக அளவில் பேசப்படும் நடிகராக மாற்றியது இந்த விடுதலை படம்தான்.
பரோட்டா சூரி:
இந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கை பயணத்தை திருப்பி பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஆச்சரியத்தை தான் வரவழைக்கின்றது. சின்னத்திரையில் ஒரு சாதாரண மெக்கானிக் ரோலில் நடித்த சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து அதில் இருந்து பரோட்டா சூரி ஆக மாறினார். அதன் பிறகு சின்ன சின்ன ரோல் கிடைத்தாலும் அதை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் நகைச்சுவையை கலந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார் சூரி .
அதுதான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மாற்றியதற்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், சூரி என ப்ரோமோஷனில் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசி வருகின்றனர் .இதில் சூரியை பற்றி விஜய் சேதுபதி சொன்ன ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய்சேதுபதியை விட 10 மடங்கு சம்பளம்:
நான் மகான் அல்ல படத்தில் சூரிக்கு ஒரு நல்ல கேரக்டர். ஆனால் விஜய் சேதுபதி ஹீரோவுக்கு தோழனாக நடித்திருப்பார். அதில் விஜய் சேதுபதி பெரிய அளவில் தெரிய மாட்டார். சூரி மட்டும்தான் பெரிதாக தெரிவார். அந்த நேரத்தில் விஜய் சேதுபதியை விட சூரிக்கு 10 மடங்கு சம்பளம் அதிகமாம். ஏனெனில் அதற்கு முன்பாக வெண்ணிலா கபடி குழு படத்திலேயே சூரி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அதனால் அவருக்கு அதிக சம்பளம். ஆனாலும் நாங்கள் பார்க்கும் பொழுது பேசும்பொழுது உன்னைவிட நான் அதிகம் சம்பளம் வாங்குகிறேன் என ஒரு நாள் கூட சூரி சொன்னதே இல்லை. அந்த கெத்தும் அவருக்கு வந்ததே இல்லை என சூரியை பற்றி பெருமையாக விஜய் சேதுபதி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.