எல்லாத்துக்கும் நான்தான் காரணம்!.. எம்.ஜி.ஆரிடம் கண்ணீர் விட்ட ஜானகி!.. நடந்தது இதுதான்!...
சிறுவனாக இருக்கும்போதே நாடகங்களில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். 30 வருடங்கள் நாடகங்களில் நடித்த பின்னரே சினிமாவுக்கு போனார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறினார். ஆனாலும், வறுமை இவரை தொடர்ந்து கொண்டே வந்தது. தன்னுடன் நடித்த நடிகை ஜானகியை 1948ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னரும் ஜானகியுடன் சில படங்களில் நடித்தார்.
அப்படி அவர் ஜானகியுடன் நடித்து 1953ம் வருடம் வெளியான திரைப்படம் நாம். இப்படத்தை காசிலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் எம்.ஜி.ஆருக்கு ஒரு தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு முன் 29 படங்களில் நடித்து முடித்திருந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சரியாக அவர் செட்டில் ஆகவில்லை. பொருளாதார ரீதியாக அவர் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் பல சங்கடங்களையும் அவர் சந்தித்தார்.
இதைப்பார்த்த அவரின் மனைவி ஜானகி ‘என்னை திருமணம் செய்து கொண்டதால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்’ என கன்ணீர் விட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘நான் பிறந்தது முதலே வறுமை என்னை விரட்டி வருகிறது. நான் ஒரு ராசியில்லாதவன். இப்போது நாம் சந்திக்கும் வறுமைக்கு நீ காரணம் அல்ல’ என ஆறுதல் சொன்னார். அப்போது ஜானகி ‘மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எனக்கு நல்ல மதிப்புண்டு. நான் கேட்டால் கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். மேலும், நான் நன்றாக சிப்ஸ் வகைகளை செய்வேன். அதை செய்து கடைகளுக்கு கொடுப்போம். நெய் ஆப்பம் செய்து சின்ன சின்ன டீ கடைகளுக்கு கொடுக்கலாம்’ என சொன்னார்.
அன்று இரவு முழுவதும் இருவரும் அதே யோசனையில் இருந்தனர். அடுத்த நாள் காலை ‘ஜெனோவா’ எனும் ஒரு மலையாள படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்து ஒரு பெரிய தொகையை முன் பணமாகவும் கொடுத்தார். அது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வறுமையிலிருந்து எம்.ஜி.ஆர் மீண்டார். மேலும், சம்பாதித்த பணங்களில் பெருமளவு ஏழை மக்களுக்கு கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.