மாநாடு தள்ளி போனதற்கு காரணம் இதுதானாம்! - இது எப்ப முடியுமோ!..
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 24ம் தேதியான நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார். இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஏற்கனவே சிம்பு படமென்றால் ரிலீஸின் போது பஞ்சாயத்து வரும். அன்பானவன் அசராதவன், அடங்காதவன் படப்பிரச்சனை பல வருடங்களாக அவரை துரத்தி வருகிறது. எனவே, அது காரணமாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. சில சிம்பு ரசிகர்கள் ‘அரசியல் ரீதியான காரணங்கள்தான் காரணம்’ எனக் கூறி வந்தனர்.
ஆனால், உண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சந்தித்துள்ள நிதிப்பிரச்சனையே மாநாடு படம் தள்ளி சென்றதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் மாநாடு திரைப்படம் பல மாதங்கள் படப்பிடிப்பில் இருந்தது.
எனவே, திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக செலவு செய்து இப்படத்தை உருவாக்க வேண்டியிருந்தது .எனவே, பைனான்சியர்களிடம் கடன் வாங்கியிருந்தார் சுரேஷ் காமாட்சி. ஆனால், அந்த பணத்தை அவரால் திருப்பு தர முடியவில்லை. எனவேதான், அவர்கள் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இது தயாரிப்பாளர்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனைதான். படத்தை ரிலீஸ் செய்ய விடுங்கள். வசூலான பின் வாங்கிய பணத்தை கொடுக்கிறேன் என தயாரிப்பாளர் கூறுவார். அதற்கு உத்தரவாதம் இல்லை. வசூல் ஆகாமல் நஷ்டத்தை சந்தித்தால் என்ன செய்வது? எனவே, பணத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என பைனான்சியர்கள் கழுத்தில் துண்டை போடுவார்கள். இதன் காரணமாகவே பல திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகியும் வெளியாகாமல் பல வருடங்களாய் தூங்கிக் கொண்டிருக்கும்.
மாநாடு படம் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.