தியேட்டர்ல ஹிட்… ஓடிடியில் ஃப்ளாப்… ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் திரைப்படங்கள்…
ஒரு திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்பது திரையரங்குகளில்தான் முடிவாகும். ஆனால் ஓடிடி யுகத்திற்கு பிறகு இந்த நிலை குழறுபடியாக மாறிவிட்டது. அதாவது சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும்போது வரவேற்பு நன்றாக இருக்கும். ஆனால் அதே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் வரும்.
அதே போல் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது வரவேற்பு இருக்காது. ஆனால் அதே திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இது போன்ற பல குழப்பங்கள் ரசிகர்களின் மத்தியில் சமீப காலமாக நிகழ்ந்து வருகின்றது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த நிலையில் திரையரங்கில் வெளியான போது ஹிட் அடித்து ஓடிடியில் பல்பு வாங்கிய சில லேட்டஸ்ட திரைப்படங்களை குறித்து இப்போது பார்க்கலாம்.
விருமன்
கடந்த ஆகஸ்து மாதம், கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விருமன்”. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கஞ்சா பூவு கண்ணால”, “மதுர வீரன்” போன்ற பாடல்கள் வெற லெவலில் ஹிட் அடித்தன.
“விருமன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தபோது வெகுஜன ரசிகர்கள் கொண்டாடிய ஒரு கிராமத்து திரைப்படமாக வெற்றி பெற்றது. ஆனால் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்தபோது இணைய வாசிகளால் பங்கமாய் கலாய்க்கப்பட்டது.
வெந்து தணிந்தது காடு
சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக “மல்லிப்பூ” பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலம்பரசனின் யதார்த்தமான நடிப்பை பலரும் பாராட்டினர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெற்றி விழா எல்லாம் நடத்தினார். ஆனால் ஓடிடியில் இத்திரைப்படம் வெளியானபோது “தூக்கம் வருகிறது. ஸ்கிரீன்ப்ளே சொதப்பல்” போன்ற விமர்சனங்கள் வலம் வந்தது.
டான்
கடந்த மே மாதம், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் திரையரங்கில் வெளியானபோது யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது. குறிப்பாக இத்திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியது. ஆனால் “டான்” படம் ஓடிடியில் வெளிவந்தபோது “கிரிஞ்ச் படம், மொக்கை காமெடி” என பல விமர்சனங்கள் எழுந்தன.
காந்தாரா
கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் “காந்தாரா’. இத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இத்திரைப்படம் வெளியானது. இப்போதும் திரையரங்குகளில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து கன்னட திரைப்பட உலகில் சாதனை படைத்துள்ளது.
ஆனால் இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான நிலையில் இணையவாசிகளின் மத்தியில் “படத்துல ஒன்னுமே இல்லையே, இந்த படத்தையா இப்படி கொண்டாடுனாங்க” போன்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.