ஆக்சன் படத்திற்கு இப்படி ஒரு மொக்கை டைட்டிலா??.. விஜய்யின் “துப்பாக்கி” குறித்த சுவாரஸ்ய தகவல்கள்…
விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் “துப்பாக்கி”. இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
விஜய்யின் கேரியரிலேயே “துப்பாக்கி” திரைப்படம் வேற லெவல் மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக இத்திரைப்படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் பேசிய “ஐ அம் வெயிட்டிங்” என்ற வசனம் இப்போதும் மிகப் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் “துப்பாக்கி” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
“துப்பாக்கி” திரைப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் ஹிந்தியில்தான் இயக்க முடிவுசெய்திருந்தார். அக்சய் குமாரிடம் இந்த கதையை கூற அவர் “சரி பண்ணலாம்” என தலையாட்டி இருக்கிறார். ஆனால் அக்சய் குமார் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் முருகதாஸின் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
அப்போதுதான் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சி, முருகதாஸை தொடர்புகொண்டு “விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குகிறீர்களா?” என கேட்டிருக்கிறார். உடனே அக்சய் குமாரிடம் சென்று “இந்த கதையை நான் முதலில் தமிழில் இயக்கிவிட்டு வருகிறேன்” என அனுமதி கேட்டிவிட்டு சென்னைக்கு பறந்திருக்கிறார் முருகதாஸ்.
எனினும் முருகதாஸ் கூறியபடியே “ஹாலிடே” என்ற பெயரில் “துப்பாக்கி” திரைப்படத்தை 2014 ஆம் ஆண்டு ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்தார் முருகதாஸ்.
இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால் “துப்பாக்கி” திரைப்படத்தின் கதையை அக்சய் குமாருக்கும் முன்பே சூர்யாவிடம் கூறியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் சூர்யா, “இந்த கதை வேண்டாம்" என கூற, அதன் பிறகுதான் முருகதாஸ் “ஏழாம் அறிவு” திரைப்படத்தின் கதையை கூறி சம்மதம் வாங்கியிருக்கிறார்.
மேலும் “துப்பாக்கி” திரைப்படத்திற்கு முதலில் “மாலை நேர மழைத்துளி” என்ற டைட்டிலைத்தான் வைத்தார்களாம். இது போன்ற ஆக்சன் திரைப்படத்திற்கு இந்த டைட்டில் சரிவராது என தோன்ற, அதன் பின்தான் “துப்பாக்கி” என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
அதே போல் விஜய்யின் சினிமா பயணத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் “துப்பாக்கி” திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.