“I Know I Know…” ரகுவரனின் சிக்னேச்சர் வசனம் உருவானது எப்படி தெரியுமா?... ஒரு சுவாரசிய தகவல்…

Raghuvaran
தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். வில்லன் என்றாலே மீசை வைத்துக்கொண்டும் மரு வைத்துக்கொண்டும் பயங்கரமான தோற்றத்தில் பல வில்லன் நடிகர்கள் வலம் வந்துகொண்டிருந்தபோது, அந்த டெம்ப்ளேட்டை எல்லாம் உடைத்து தனது முக பாவனைகளின் மூலமாகவே டெரர் வில்லனாக பயம் காட்டியவர் ரகுவரன்.

Raghuvaran
ரகுவரன் வில்லனாக நடித்த திரைப்படங்களில் “புரியாத புதிர்”, “பாட்ஷா”, “அருணாச்சலம்”, “ரட்சகன்”, “முதல்வன்” ஆகிய திரைப்படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக அமைந்தன.
ரகுவரன் என்றாலே நமக்கு நியாபகம் வருவது அவரது சிக்னேச்சர் வசனமான “I Know, I Know” என்ற வசனம்தான். இந்த வசனம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “புரியாத புதிர்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வசனமாகும். இந்த வசனம் இப்போதும் கூட மிகப் பிரபலமான வசனமாக அறியப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரகுவரன் போல் மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த வசனத்தைத்தான்.

Raghuvaran
இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரகுவரன், “I Know, I Know” என்ற வசனம் உருவான விதம் குறித்த பின்னணியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்த குறிப்பிட்ட காட்சியில் ரகுவரன் பேசுவதற்காக கிட்டத்தட்ட 5, 6 பக்கங்கள் வசனங்கள் எழுதப்பட்டிருந்ததாம். அதனை பார்த்து படித்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவரிடம் வந்து “வசனங்கள் நீளமாக இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு ரகுவரன் “ஆமாம் சார். அதிகமாகத்தான் இருக்கிறது” என கூறி அதனை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது “இந்த வசனங்கள் இல்லாமலே கன்வே பண்ணலாம்” என கூறியிருக்கிறார். உடனே எப்படி பண்ணலாம் என கேட்டாராம் இயக்குனர். அதன் பின்தான் ரகுவரன் “I Know I Know” என்ற வசனத்தை பேசிக்காட்டினாராம். இவ்வாறுதான் ரகுவரனின் சிக்னேச்சர் வசனம் உருவாகி இருக்கிறது.