விக்ரமனிடம் இருந்த அசாத்தியமான திறமை!… உதவி இயக்குனரா சேரும்போதே இப்படியா?

by Arun Prasad |   ( Updated:2023-06-11 06:00:08  )
Vikraman
X

Vikraman

இயக்குனர் விக்ரமன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். ஒரே பாடலில் முன்னேறுவது போன்ற காட்சியமைப்பை டிரெண்டாக மாற்றியவர் விக்ரமன். “பூவே உனக்காக”, “சூர்ய வம்சம்”, “வானத்தை போல”, “உன்னை நினைத்து” போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவரது “சூர்ய வம்சம்” திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வரும் கிளாசிக் திரைப்படமாக ஆகியுள்ளது.

விக்ரமன், முதன்முதலாக இயக்கிய திரைப்படம் “புது வசந்தம்”. அவரது முதல் திரைப்படமே வேற லெவலில் ஹிட் அடித்தது. விக்ரமன், பார்த்திபன், மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் அவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Vikraman

Vikraman

விக்ரமன் தனது சொந்த ஊரை விட்டு சினிமாவில் இயக்குனராக ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தார். அந்த சமயத்தில் மணிவண்ணன் “குவா குவா வாத்துகள்” என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். மணிவண்ணனிடம்தான் உதவி இயக்குனராக சேரவேண்டும் என்று நினைத்த விக்ரமன், மணிவண்ணனின் அலுவலகம், வீடு ஆகியவற்றிற்கு அடிக்கடி சென்றும் அவரை பார்க்க முடியவில்லையாம்.

Manivannan

Manivannan

விக்ரமனின் அசாத்திய திறமை

அதன் பின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே அனுதினமும் சென்று வந்தாராம். அவர் ஏற்கனவே பல கதைகளை எழுதி வைத்திருந்தாராம். அதை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஃபைலில் போட்டுவைத்திருந்தாராம். அந்த ஃபைலோடுதான் மணிவண்ணனை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு வருவாராம். தினமும் கையில் ஃபைலோடு தென்படும் இளைஞனை பார்த்த மணிவண்ணன், அவரை அழைத்து “என்ன தினமும் வந்துட்டு இருக்க, என்ன விஷயம்?” என கேட்க, அதற்கு விக்ரமன், “சார், உங்ககிட்ட உதவி இயக்குனரா சேரணும். உங்க ஆஃபிஸ், வீடு ரெண்டுலயும் உங்களை எப்படியாவது பாத்துடனும்ன்னு நினைச்சி அலைஞ்சிக்கிட்டே இருந்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. அதனால்தான் படப்பிடிப்பு தளத்திற்கே வந்துவிட்டேன். நான் நிறையா கதை எழுதி வைத்திருக்கிறேன், பார்க்கிறீர்களா?” என தனது ஃபைலை காட்ட, அதற்கு மணிவண்ணன், “கதை படிக்கிறதுக்குலாம் எனக்கு நேரம் இல்லை. நீ என்ன பண்றனா, ஒரு நூறு படத்துக்கான டைட்டில்களை எழுதிகொண்டு வா. ஏற்கனவே வெளிவந்த டைட்டில்களாக இருக்கக்கூடாது. புதிதாக இருக்க வேண்டும்” என கூறினாராம்.

Vikraman

Vikraman

உடனே அங்கிருந்து நகர்ந்த விக்ரமன், ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு வடபழனியில் இருந்து பட்டினம்பாக்கம் போகும் பேருந்தில் ஏறி பட்டினம்பாக்கத்திற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார். பட்டினம்பாக்கம் வரும் வரை டைட்டில்களை எழுதினாராம். அதன் பின் பட்டினம்பாக்கத்தில் இறங்கி மீண்டும் வடபழனிக்கு செல்லும் பேருந்தில் ஏறி வடபழனிக்கு டிக்கெட் எடுத்து வடபழனி வரும் வரை மீதி டைட்டில்களை எழுதினாராம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 100 டைட்டில்களையும் எழுதி முடித்துவிட்டாராம். அதன் பின் நேராக படப்பிடிப்பு தளத்தில் இருந்த மணிவண்ணனை பார்க்க சென்றிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் 100 புது டைட்டில்களை எழுதிகொண்டு வந்த விக்ரமனின் திறமையை பார்த்த மணிவண்ணன், அந்த நிமிடமே அவரை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டாராம்.

Next Story