காரைக்குடியில் தொடங்கிய ஏவிஎம் ஸ்டூடியோ… வடபழனிக்கு வந்தது எப்படி..? 10 ஏக்கர் நிலத்தின் சுவாரஸ்ய பின்னணி…
தமிழ் சினிமா வரலாற்றில் பழம்பெரும் நடிகர்களின் வெற்றிக்கு ஏவிஎம் ஸ்டூடியோவின் பங்கு மிகவும் பெரியது. சினிமா என்றாலே சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் உலக உருண்டை தான் ஞாபகம் வரும். 1940களில் இருந்து ஓடிடி யுகம் வரை ஏவிஎம் நிறுவனம் இப்போதும் அதன் தனித்துவத்தை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.
இந்த ஏவிஎம் ஸ்டூடியோவை தொடங்கியவர் ஏ வி மெய்யப்ப செட்டியார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1907 ஆம் ஆண்டில் காரைக்குடியில் நகரத்தார் வீட்டில் பிறந்த ஏ வி மெய்யப்பச் செட்டியார், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவரது தந்தை வைத்திருந்த ஏவி அண்ட் சன்ஸ் என்ற இசைத்தட்டு நிறுவனத்தில் உதவியாளராக இருந்தார்.
இது தொடர்பாக ஏவிஎம்க்கு அடிக்கடி சென்னை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது சென்னையில் நாராயணன் மற்றும் சிவம் செட்டியார் ஆகியோர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பை கொண்டு அவர்களுடன் இணைந்து ஒரு இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.
இப்படி அவரின் தொழில் சென்றுகொண்டிருக்க, திடீரென சினிமா தயாரிக்க வேண்டும் என ஆசை ஏவிஎம்க்கு வருகிறது. தான் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்கிறார் ஏவிஎம்.
அதன் படி 1934 ஆம் ஆண்டு கல்கத்தா சென்று ரூ. 80 ஆயிரம் செலவில் “அல்லி அர்ஜூனா” என்ற திரைப்படத்தை தயாரித்தார். முதல் திரைப்படமே தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து “ரத்னாவளி”, “நந்தகுமார்” ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். அத்திரைப்படங்களும் நஷ்டத்தையே பரிசாக தந்தது.
இவ்வாறு அவர் தயாரித்த படங்கள் மூன்றும் தோல்வியை தந்த பிறகு, சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை தொடங்கினால் தான் நாம் லாபம் பார்க்க முடியும் என முடிவு எடுத்தார். இதனை தொடர்ந்து தான் 1940 ஆம் ஆண்டு அவருக்கு நெருக்கமான சிலருடன் இணைந்து பிரகதி என்ற ஸ்டூடியோவை தொடங்கினார்.
இந்த புதிய ஸ்டூடியோவின் முதல் திரைப்படம் “பூகைலாஸ்” என்ற தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து “வசந்த சேனா”, “அரிச்சந்திரா”, “சபாபதி”, “என் மனைவி” போன்ற திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்தார். இத்திரைப்படங்கள் அனைத்தும் அமோக வெற்றி பெற்றது.
இந்த வேளையில் தான் இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஆதலால் “பிரகதி” ஸ்டூடியோவில் பல மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை. இதன் பிறகு தான் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
அதாவது ஏற்கனவே கன்னடத்தில் தயாரித்து வெற்றி பெற்ற “ஹரிச்சந்திரா” திரைப்படத்தை தமிழில் டப் செய்ய முடிவெடுத்தார் ஏவிஎம். ஆனால் அதே நேரத்தில் தமிழில் ஒரு ஒரிஜினல் “ஹரிச்சந்திரா” திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோ தயாரித்திருந்தது. ஆதலால் இந்த டப் செய்யப்பட்ட “ஹரிச்சந்திரா” வேலைக்கு ஆகவில்லை.
இதன் பிறகு “பிரகதி” ஸ்டூடியோவின் மூலம் “ஸ்ரீவள்ளி” என்ற திரைப்படத்தை தயாரித்தார் ஏவிஎம். இத்திரைப்படத்தை ஏவிஎம்மே இயக்கினார். இத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதாவது இரண்டு லட்சம் பட்ஜெட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட “ஸ்ரீவள்ளி” திரைப்படம் பத்து மடங்குக்கும் மேல் லாபத்தை பெற்றுத்தந்திருக்கிறது.
“ஸ்ரீவள்ளி” திரைப்படத்தை தொடர்ந்து ஏவிஎம் காஷ்மீருக்கு ஓய்வுக்காக செல்ல “பிரகதி” ஸ்டூடியோவின் பார்ட்னர்கள் திடீரென ஸ்டூடியோவை விற்றுவிட்டார்கள். இது ஏவிஎம்க்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
இதனை தொடர்ந்து ஏவி மெய்யப்ப செட்டியார் ஒரு சிறப்பான முடிவை எடுத்தார். அதாவது இனிமேல் யாருடனும் கூட்டு சேராமல் தனக்கே சொந்தமான ஒரு ஸ்டூடியோவை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
உடனே தனது சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று தேவக்கோட்டை ஜமீந்தாருக்கு சொந்தமான நாடக கொட்டகையை 3000 ரூபாய் வாடகைக்கு கேட்டு வாங்கினார். அந்த நாடக கொட்டகைக்கு தான் “ஏவிஎம்” ஸ்டூடியோஸ் என்ற பெயரை முதன் முதலில் வைக்கிறார் ஏவிஎம். வரலாறு தொடங்கியது.
பெரும் சிரமங்களுக்கு மத்தியில் “நாம் இருவர்” என்ற திரைப்படத்தை 1947 ஆம் ஆண்டு தயாரித்து ரிலீஸ் செய்தார் ஏவிஎம். இது தான் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வெளிவந்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே இது முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மக்கள் ஆரவாரமாக இத்திரைப்படத்தை கொண்டாடினார்கள்.
அதன் பின் “வேதாள உலகம்”, “ராம்ராஜ்யம்” என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் ஏவிஎம். ஏவிஎம்மின் தொடர் வெற்றியை பார்த்த தேவகோட்டை ஜமீன் கொட்டாய் வாடகையை பத்தாயிரம் ரூபாயாக ஏற்றினார்.
இதனை தொடர்ந்து தான் ஏவிஎம் தனது ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்ற முடிவெடுத்தார். இந்த நேரத்தில் தான் இந்திய பிரிவினை ஏவிஎம்க்கு ஒரு வழியை காட்டியது.
அதாவது சென்னைக்கு ஸ்டூடியோவை மாற்ற வேண்டும் என முடிவெடுத்த ஏவிஎம், ஜெமினி எஸ் எஸ் வாசனின் ஆலோசனையின் பெயரில் வடபழனி கோவிலுக்கு தொலைவில் பத்து ஏக்கரில் ஒரு காலி இடம் இருக்கிறது என்பதை ஏவிஎம் அறிந்துகொண்டார்.
அந்த காலி இடம் இதற்கு முன் ஒரு இஸ்லாமியர் வைத்திருந்தார் எனவும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அவர் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குச் சென்றுவிடார் எனவும் அவருக்கு தெரியவந்தது.
உடனே அந்த காலி நிலத்தை சுமார் 37,000 க்கு வாங்கினார் ஏவிஎம். தற்போது அந்த இடத்தில் தான் ஏவிஎம் ஸ்டூடியோ இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு cult ஆன தயாரிப்பு நிறுவனத்தின் பின்னணி கதை இப்படிப்பட்ட பல திருப்பங்களை கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.