வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வந்து முதல்வர் ஆன நடிகர்...ஆந்திராவில் இவர் தான் எம்ஜிஆர்...!
தென்னிந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய மைல் கல் இவர். சினிமா வரலாற்றில் பெரிய அளவில் சாதனை படைத்த இவர் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அரசியல் உலகிலும் பெரிய அளவில் மகத்தான வெற்றி பெற்றவர். கிட்டத்தட்ட இவர் ஆந்திராவில் ஒரு எம்ஜிஆர்.
செல்வந்தராகப் பிறந்து அனைத்தையும் இழந்து பின் திரைத்துறையில் நாயகனாகவும் செல்வந்தராகவும் மறைந்தார்.
ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் செல்வகுடும்பத்தில் பிறந்தார் நந்தமூரி தாரக ராமா ராவ் என்ற என்டிஆர். இவர் விஜயவாடாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவரது குரல் வளம் தான் இவருக்கு பெரிய மூலதனம். பள்ளிப்பருவங்களில் பாடல்களைப் பாடி கலைத்திறனில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார் என்டிஆர்.
அவரது குடும்பம் செல்வச்செழிப்பை இழந்து வறுமையில் வாடியது. அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாமல் அல்லல்பட்டது. பள்ளிப்படிப்பை கஷ்டப்பட்டு முடித்து ஆந்திர கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கலை ஆர்வம் சிறிதும் குறையவே இல்லை. கல்லூரி நாள்களில் மேடை நாடகங்களில் நட்சத்திரமாக மின்னினார். இந்திய சிவில் சர்வீஸில் கிடைத்த வேலையை உதறித்தள்ளினார். கலைத்துறை தான் தனது லட்சியம் என்றார்.
பெரும் கனவுகளில் இருந்த அவருக்கு 1947ல் திரைத்துறைக் கதவுகளைத் திறந்தது. மனதேசம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். பலேடுரிபில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப்படம் தான் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது.
ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்தது அவரது நடிப்பு ஆற்றல். 300 படங்களுக்கும் மேலாக நடித்து 40 வருட காலமாக நடிகராகவே ஜொலித்தார் என்டிஆர். 200க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்கள், 15 தமிழ்ப்படங்கள், ஒருசில இந்தி மற்றும் கன்னடப் படங்கள் என தவிர்க்க முடியாத தென்னிந்திய நட்சத்திரமாக மின்னினார்.
பல விருதுகளை வாரிக் குவித்தவர் என்டிஆர். முதல் படம் வெளியான போது சாப்பிட உணவுக்கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார். பல நாள்கள் பட்டினி கிடந்துள்ளார். 1951ல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த போது அந்தக்காலக் கட்டம் தான் அவருக்குக் கைகொடுத்தது. அந்த ஆண்டில் வெளியான மல்லீஸ்வரி, பாதாள பைரவி படங்களில் வெற்றி என்டிஆரின் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியது.
அவரது படங்களான லவகுசா மற்றும் மாயாபஜார் அவரது முந்தையப் படங்களின் சாதனைகளை முறியடித்தது. பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடித்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் நெருக்கமான நட்பு கொண்டவர் என்டிஆர்.
கோவை செழியன் எம்ஜிஆரை வைத்து குமரிக்கோட்டம், உழைக்கும் கரங்கள் ஆகிய படங்களை எடுத்தார். இவர் அதிமுகவில் இருந்தார். முதலாளி என்று எம்ஜிஆர் இவரை அழைப்பதுண்டு. இந்த நிலையில் கோவை செழியன் என்டிஆரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை எம்ஜிஆரிடம் சொன்னார். உடனே என்டிஆரிடம் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் பேசினார். அவரும் எம்ஜிஆர் சொன்ன உடனே கோவை செழியன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
அதேவேளையில் தமிழில் எம்ஜிஆர் நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்டிஆர் நடிப்பில் வெளியானவை. ராமராவ் நடித்த ராமுடு பீமுடு படம் தான் தமிழில் வெளியான எங்க வீட்டுப்பிள்ளை. 4 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம். எம்ஜிஆருக்கும், என்டிஆருக்கும் ஒரே மேக் அப் மேன் தான். அவர் பாலக்காட்டைச் சேர்ந்த பத்மநாபன்.
புராணப்படங்களில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்த என்டிஆரின் நடிப்பு அவரை மக்கள் மத்தியில் பூஜை அறை வரை எடுத்துச் சென்று அழகு பார்த்தது. பலரும் அவரைக்கடவுளாகவே நினைத்துத் தரிசிக்க ஆரம்பித்தனர். அதன்விளைவாகத் தான் கர்ணன் படத்தில் சிவாஜிக்கு இணையாக புகழ் பெற்றார். உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலில் கிருஷ்ணராக நடித்து மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றார்.
தெலுங்குசினிமாவில் 10 பிலிம்பேர் விருதுகளையும், 1968ல் தேசிய விருதும் பெற்றுள்ளார். அதே ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்தது. 1978ல் ஆந்திரப்பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1980களில் அரசியலில் குதித்தார். அவர் முதலில் இருந்த காங்கிரஸ் கட்சியில் பிரச்சனை தோன்றியது. ஆனால் ஓயவில்லை.
இதற்கிடையில் எம்ஜிஆர் தனிக்கட்சித் தொடங்கி தமிழகத்தில் முதல்வர் ஆகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். எம்ஜிஆரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அவரது தெலுங்கு ராஜ்யம் என்ற கட்சியின் பெயரையும் தெலுங்கு தேசம் என்று மாற்றி வைக்கச் சொன்னது எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆர் எனது அண்ணன். எனக்கு வழிகாட்டி என்று எம்ஜிஆர் பாணியிலேயே தேர்தல் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் திறந்த வேனில் சென்று செய்யும் பாணியை முதலில் அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர் தான். அதே போல ஆந்திராவில் என்டிஆரும் பிரச்சாரம் செய்தார். மக்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றார். 1982ல் கட்சியைத் தொடங்கி 1983ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.