“அஜித் இப்படி செய்றதுக்கு ரஜினிதான் காரணம்”… ஓஹோ இதுதான் விஷயமா??
அஜித்குமாரின் “துணிவு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் புரோமோஷனுக்காக அஜித் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இத்திரைப்படத்திற்கும் அஜித் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை.
அஜித்குமார் பல வருடங்களாக தனது திரைப்படத்தின் புரோமோஷனுக்கு கூட வருவதில்லை. இந்த விஷயம் தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. ஆனால் அஜித் பல வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தாராம். சமீப காலமாகத்தான் அஜித் தனது வழக்கத்தை மாற்றிக்கொண்டதாக ஒரு பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜித் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை? என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
“ஒரு ஹீரோ என்பவர் யாரும் சந்திக்கமுடியாத ஒரு இடத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறார் அஜித். அந்த ஹீரோவை அவர்கள் திரையில்தான் பார்க்கவேண்டும் என்று ஒரு கொள்கையையும் அவர் வைத்திருக்கிறார். இது ரஜினி அவருக்கு சொல்லிக்கொடுத்த பாடமாக இருக்கலாம்” என்கிறார் அந்தணன்.
மேலும் அப்பேட்டியில் “அஜித் இப்போது எப்படி இருக்கிறாரோ அது போலத்தான் ஒரு காலத்தில் ரஜினியும் இருந்தார். இன்று வயதின் காரணமாக ரஜினி கொஞ்சம் பலவீனமாக தென்படலாம். இல்லை என்றால் சமீபத்தில் ரஜினி திரைப்படங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் கூட அந்த பலவீனத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ரஜினி ஒரு காலத்தில் அஜித் போலவேதான் இருந்தார். ரஜினியின் பேட்டிகள் அவ்வளவாக பத்திரிக்கைகளில் இடம்பெறாது. இதைத்தான் அவர் அஜித்திற்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த சின்ன விஷயத்துக்கு ஷூட்டிங்கையே நிறுத்தச் சொல்லிட்டாரே!! கேப்டனின் கடும்கோபத்திற்கு பின்னணி என்ன??
அஜித்தின் அசல் திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் அவரும் சந்தித்து பேசினார்கள். அதன் பிறகுதான் அஜித் இப்படி மாறினார். அதற்கு முன்பெல்லாம் அஜித் அடிக்கடி பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைப்பார். இந்த பழக்கத்தை அஜித் முதன்முதலில் மாற்றியது ரஜினியை சந்தித்ததற்கு பிறகுதான்” என்று அந்தணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.