விஜய் படம் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.....
ஒரு சமயத்தில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை தான் அனுஷ்கா. இவர் தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற மாதவன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெளியான அருந்ததி படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா பாகுபலி படம் மூலம் மேலும் பிரபலமானார்.
பின்னர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவால் மீண்டும் எடையை குறைக்க முடியவில்லை. அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த அனுஷ்கா, சைலன்ஸ் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.
இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக ஒரு சவாலான கேரக்டரில் அனுஷ்கா நடித்திருந்தாலும் படம் தோல்வி அடைந்து விட்டது. இதனால் அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் அனுஷ்காவிற்கு அண்மையில் ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ் பட வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளதாம். அதன்படி தமிழில் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் படத்தில் தான் அனுஷ்கா நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தாண்டவம் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் இணையும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாம். எப்படியோ அடித்து பிடித்து கோலிவுட்டில் ஒரு பட வாய்ப்பை அனுஷ்கா கைப்பற்றி விட்டார். இதுதவிர சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் அனுஷ்கா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.