“அம்மாவும் கடவுளும் ஒன்னு கிடையாது”.. வாலியுடன் மல்லுக்கட்டிய ஏ ஆர் ரஹ்மான்.. பாடல் வரிகளையே மாற்றிய புத்திசாலித்தனம்

by Arun Prasad |
“அம்மாவும் கடவுளும் ஒன்னு கிடையாது”.. வாலியுடன் மல்லுக்கட்டிய ஏ ஆர் ரஹ்மான்.. பாடல் வரிகளையே மாற்றிய புத்திசாலித்தனம்
X

கவிஞர் வாலி தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் பல்லாயிரத்திற்கும் அதிகமான சினிமா பாடல்களை எழுதியுள்ளார். எம் ஜி ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

வாலியை “வாலிப” கவிஞர் என அழைப்பதும் உண்டு. காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை அப்டேட் செய்துகொண்டவர் வாலி. அதனால் தான் அவரால் எம் ஜி ஆரின் “நான் ஆணையிட்டால்” பாடலையும் எழுத முடிந்தது. “எக்ஸ் மச்சி ஒய் மச்சி” போன்ற பாடல்களையும் எழுத முடிந்தது.

இவ்வாறு மூன்று தலைமுறையாக தனது மயக்கும் பாடல் வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட வாலி, தனது “நினைவு நாடாக்கள்” என்ற புத்தகத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு நெருடலான உரையாடலை பகிர்ந்துள்ளார்.

அதாவது அப்புத்தகத்தில் நிஷ்காம்ய கர்மம் என்று ஒரு பகுதிக்கு பெயரிட்டிருக்கிறார் வாலி. “நிஷ்காம்ய கர்மம்” என்றால் விருப்பு வெறுப்பின்றி தன் கொள்கை அல்லாத விஷயங்களாக இருந்தாலும் தன்னுடைய பணியை செவ்வன செய்வதாகும்.

கவிஞர் வாலி திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர். திராவிட சித்தாந்தங்களை திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கொண்டு சென்ற காலம் அது. வாலி ஆன்மீகவாதி என்றாலும் திரைப்படங்களுக்காக நாத்திக பாடல்களை கூட எழுதியவர். இது போன்ற பல அனுபவங்களை அந்த பகுதியில் பகிர்ந்து வந்த வாலி, ஏ ஆர் ரஹ்மானிடம் நடைபெற்ற ஒரு வாக்குவாதத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது எஸ் ஜே சூர்யா நடித்த “நியூ” திரைப்படத்தில் இடம்பெற்ற “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா” என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின் ஏ ஆர் ரஹ்மானிடம் இருந்து வாலிக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்திருக்கிறது.

அப்போது ஏ ஆர் ரஹ்மான் “வாலி சார், எங்கள் மதத்தில் தெய்வத்தையும் தாயையும் ஒன்னா சொல்லக்கூடாது என்பார்கள். தெய்வம் என்ற வார்த்தைக்கு பதிலாக வேறு எதாவது சொல்ல முடியுமா?” என கேட்டிருக்கிறார்.

அதற்கு லேசாக கோபப்பட்ட வாலி “என்னய்யா நீ, இதெல்லாம் ஒரு தவறா எடுத்துட்டு, சரி தெய்வம்ங்குற வார்த்தைக்கு பதிலா தேவதைங்குற வார்த்தைய போட்டுக்கோ” என கூறியிருக்கிறார். இவ்வாறு தான் அப்பாடல் உருவாகி இருக்கிறது. இப்போதும் தாய் பாசத்திற்காக அப்பாடல் புகழ்பெற்று விளங்குகிறது என்பது கூடுதல் தகவல்.

Next Story