“உதயநிதியிடம்தான் நீதி கிடைக்குது”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தயாரிப்பாளர்…
உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் கீழ் சமீப காலமாக பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். “டான்”, “விக்ரம்”, “கோப்ரா”, “கேப்டன்”, சமீபத்தில் வெளியான “லவ் டூடே” போன்ற பல திரைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது “மாமன்னன்”, “இந்தியன் 2”, “KH 234” போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தற்போது “கலகத் தலைவன்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் பல தயாரிப்பாளர்களை மிரட்டி அவர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிடுகிறார் என ஒரு வதந்தி பரவலாக பரவி வந்தது. இது குறித்து ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டபோது “தயாரிப்பாளர்கள்தான் என்னை நேரில் வந்து அணுகுகிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை” என பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் “லவ் டூடே” திரைப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “பொது ஜனங்களிடம் அப்படிப்பட்ட ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர்களாகிய நாங்கள்தான் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் சென்று எங்கள் திரைப்படத்தை வெளியிட்டுத்தாருங்கள் என கேட்கிறோம்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “போனதும் கண்ணாலே, வந்ததும் கண்ணாலே”… ஜெய்ஷங்கர் வாழ்க்கையையே திருப்பி போட்ட கண்கள்…
மேலும் பேசிய அவர் “ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எங்களது திரைப்படங்களுக்கு திரையரங்குகள் அதிகமாக கிடைக்கிறது. மேலும் சரியான நேரத்தில் எங்களது பங்கும் வந்து சேர்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய பலனாக இருக்கிறது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உதயநிதி குறித்த பல நாள் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.