இளையராஜாவை ஒருமையில் திட்டிய நபர்… கொந்தளித்த உதவியாளர்… இசைஞானி என்ன பண்ணார் தெரியுமா?
இசைஞானி இளையராஜா இசையுலகிற்கே பெருமை சேர்த்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவரது இசையில் வாழ்ந்தவர் கோடி. தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் தனது இசையின் மூலம் நீங்கா இடம்பிடித்தவர் அவர்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜாவை ஒரு நபர் ஒருமையில் பேசிய சம்பவத்தை குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது பிரபல ஓவியராக திகழ்ந்த ஓவியர் சிற்பியின் ஓவியங்கள் இளையராஜாவுக்கு மிகவும் பிடிக்குமாம். ஒரு முறை தனது இஷ்ட தெய்வமான அன்னை மூகாம்பிகையை ஓவியர் சிற்பியின் கைக்கொண்டு வரைய வைத்து அதனை தனது பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் என விரும்பினாராம்.
அதன்படி ஒரு நாள் இளையராஜா தனது உதவியாளர் ஒருவரை ஓவியர் சிற்பியின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஓவியர் சிற்பியிடம் இவ்வாறு இளையராஜா “அன்னை மூகாம்பிகையின் ஓவியத்தை வரைந்துகொடுக்க முடியுமா?” எனவும் “அதற்கு எவ்வளவு பணம் கேட்பீர்கள்?” எனவும் கேட்டுவரச்சொன்னதாக கூறியிருக்கிறார்.
அதன் பின் மீண்டும் இளையராஜாவிடம் வந்த உதவியாளர், “என்னங்க, அந்த ஓவியர் சுத்த விவரம் தெரியாத ஆளா இருக்கிறாரே” என கூறியிருக்கிறார். “ஏன் என்னாச்சு?” என இளையராஜா கேட்க, அதற்கு உதவியாளர் “அந்த ஓவியத்தை வரைவதற்கு அவர் அதிக தொகை கேட்கிறார். அப்படி என்ன அற்புதமான ஓவியத்தை அவர் வரைந்துவிடப் போகிறார். அது மட்டுமில்லாமல் அவர் பேசுகிற விதமே சரியில்லை. ‘நான் கேட்கிற பணத்தை இளையராஜா கொடுப்பானா?’ என கேட்கின்றார். இப்படியெல்லாம் உங்களை பேசலாமா? அவரை விடுங்கள், வேறு ஒரு நல்ல ஓவியரை பார்த்து வரைய வைத்து வாங்கிவிடுவோம்” என கூறினாராம்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா “நீ திரும்பவும் சிற்பி வீட்டுக்குப் போ. அவர் என்ன தொகை கேட்கிறாரோ அந்த தொகையை நான் கொடுப்பதாகச் சொல். இந்த ஓவியத்தை எப்போது முடித்துக்கொடுப்பார் என்று மட்டும் கேட்டுவிட்டு வா” என்று கூறியிருக்கிறார்.
உடனே அந்த உதவியாளர் “அவர் சொன்ன தொகைக்குலாம் ஒத்துக்க வேண்டாம். நான் எப்படியாவது பேசி பாதி தொகைக்கு முடிச்சிடுறேன்” என்று கூற, அதற்கு இளையராஜா “உன்னை நான் அப்படி பேசி முடிக்கச் சொன்னேனா? அவருடைய ஓவியத்திற்கு விலை நிர்ணயம் செய்வதற்கு நீயும் நானும் யாரு? அதனால் அவர் எவ்வளவு கேட்கிறாரோ அதனை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று மட்டும் அவரிடம் சொல்லிவிட்டு வா” என்று கூறினார்.
அதன் பின் சில நாட்களில் ஓவியர் சிற்பி மிகச் சிறப்பான ஒரு ஓவியத்தை வரைந்து தந்தார். அதற்கு பிறகு ஓவியர் சிற்பியும் இளையராஜாவும் சிறந்த நண்பர்களாக ஆனார்கள். இன்று வரை ஓவியர் சிற்பி வரைந்த அன்னை மூகாம்பிகையின் ஓவியம்தான் இளையராஜாவின் பூஜை அறையில் இருக்கிறதாம்.
இதையும் படிங்க: ரேஸ் குதிரையாக சினிமாவுக்குள் நுழைந்த பிரசாந்த்… ஜாக்பாட் அடித்து சம்பாதித்த நபர்கள்… அடேங்கப்பா!