தனுஷின் ‘கர’ படத்தைத் தொடர்ந்து, ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ் தீம் பாடலை பாடியுள்ளார் பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் பரீட். வெப் படத்தை இயக்கிய ஹாரூண் இப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு பக்கா இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் நடிகர் வெற்றி, நாயகிகளாக அக்சிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்க, முக்கிய வேடங்களில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, லப்பர் பந்து புகழ் ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஹாரூண், வெற்றி ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் வேடம் என்பதால், வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்றதைப் போன்று போலீஸுக்கான ஒரு மாஸ் தீம் பாடல் வேண்டும் என நினைத்தோம். அந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் பாடினால் தான் அதற்கான எனர்ஜி சரியாக இருக்கும் என்பதால் அவரைப் பாட வைத்துள்ளோம். கொரோனா காலத்தில் ‘ஸ்டவ் மேல கடாய்’ பாடல் மூலம் இணையத்தில் ட்ரெண்டான ஜூனியர் நித்யா இந்த பாடலை எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் தனுஷின் ‘கர’ படத்திற்காக ஒரு பாடலை எழுதி, பாடியிருந்த அருண்ராஜா காமராஜ், அடுத்தபடியாக ‘பரீட்’ படத்திற்கும் பாடலை பாடியுள்ளார். படங்கள் இயக்குவதுமின்றி பாடல் பாடுவதிலும் பிஸியாக இருந்து வருகிறார் அருண் காமராஜ்.





