பிரபல மொபைல் ஆப் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அசோக் செல்வன் படக்குழுவினர்… புதுவிதமான புரோமோஷனா இருக்கே!!
தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் அசோக் செல்வன், “சூது கவ்வும்”, “பீட்சா 2”, “தெகிடி”, “ஓ மை கடவுளே” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த “மன்மத லீலை”, “வேழம்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அசோக் செல்வன் தற்போது “நித்தம் ஒரு வானம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அசோக் செல்வனுடன் அபர்ணா பாலமுரளி, ரீது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிவாத்மிகா என்ற நடிகை இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அபர்ணா பாலமுரளி இதற்கு முன் “எட்டுத் தோட்டாக்கள்”, “சூரரை போற்று”, “வீட்ல விசேஷம்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் ரீது வர்மா தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”, “புத்தம் புது காலை”, “துருவ நட்சத்திரம்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
“நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிதி சாகர், ரூபக் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளிவருகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு அழகான காதல் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பார்வைக்கு குளிர்ச்சியான மனதை வருடும் வகையில் மிகவும் ரம்மியமான திரைப்படமாக இத்திரைப்படம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் படக்குழுவினர் ஜோஷ் ஆப் உடன் புரோமோஷனுக்காக கைக்கோர்த்துள்ளனர். ஜோஷ் ஆப் கன்டென்ட் கிரியேட்டர்களுடன் அசோக் செல்வன், ரீது வர்மா ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
“நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் படக்குழுவினர் ஜோஷ் ஆப் கன்டென்ட் கிரியேட்டர்களை சந்தித்தபோது இத்திரைப்படம் குறித்தான பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டனர். ஜோஷ் ஆப்-ன் மூலம் சமூக வலைத்தளத்தில் பல திறமையாளர்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.