உதவி இயக்குனர் சொன்ன காட்சியை காப்பி அடித்த கார்த்தி?? புதிதாக எழுந்த சர்தார் பட சர்ச்சை…
கார்த்தி, ராசி கண்ணா, ரஜிசா விஜயன், லைலா ஆகியோரின் நடிப்பில் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “சர்தார்”. இத்திரைப்படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஏறுமயிலேறி” என்ற சிங்கிள் பாடல் வெளிவந்தது. இப்பாடலை கார்த்தியே பாடியிருந்தார். இதில் முருகன் உட்பட பல கடவுள் வேடங்களில் தோன்றும் கார்த்தி மிகவும் ரசிக்கும்படி இருந்தார். இந்த நிலையில் இப்பாடல் குறித்து ஒரு புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
“காக்கா முட்டை”, “ஆண்டவன் கட்டளை”, “கடைசி விவசாயி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டனிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீராம் என்பவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனிடம் ஒரு புதிய திரைப்படம் எடுப்பதற்காக ஒரு கதையை கூறினாராம். அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாம். ஆனால் விஜயகாந்த்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் சண்முகபாண்டியனால் இந்த கதையில் ஆர்வம் செழுத்த முடியவில்லையாம்.
இதனை தொடர்ந்து ஸ்ரீராம் கார்த்தியிடம் அந்த கதையை கூறினாராம். கார்த்திக்கு அந்த கதை மிகவும் பிடித்துபோக, தயாரிப்பாளர் லக்ஷ்மனை போய் பார்க்கச் சொல்லி இருக்கிறார் கார்த்தி. லக்ஷ்மன் தான் “சர்தார்” திரைப்படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீராமிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் லக்ஷ்மன், “சர்தார் வெளியான பின் இத்திரைப்படத்தை குறித்து பேசுவோம்” என கூறினாராம். இந்த நிலையில் ஸ்ரீராம் கூறிய கதையில் கதாநாயகன் முருகன் வேடம் அணிந்து ஆடுவது போன்ற ஒரு காட்சி இருந்ததாம். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான “ஏறுமயிலேறி” பாடலில் முருகன் வேடம் அணிந்து கார்த்தி தென்படுகின்ற காட்சி அந்த உதவி இயக்குனர் கூறிய காட்சியில் இருந்துதான் எடுக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளதாம். இத்தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி, வலைப்பேச்சு வலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். இந்த சர்ச்சை பின்னாளில் பூதாகரமாக வெடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.