சிவாஜி கணேசன் உலகம் போற்றும் ஒரு அசாத்திய நடிகராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட அசாத்திய நடிகரையே ஒரு உதவி இயக்குனர் பரிசோதித்த சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய், ஜாவர் சீதாராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அந்த நாள்”. இத்திரைப்படத்தை எஸ்.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் புதுமைக்கு வித்திட்ட திரைப்படமாக “அந்த நாள்” அமைந்தது.
படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகனை கொன்றுவிடுகிறார்கள். அதன் பின் யார் கொலை செய்தார் என விசாரணை நடைபெறுகையில் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கோணத்திலும் படம் நகரும். 1950களிலேயே இது போன்ற ஒரு த்ரில்லர் கதையை உருவாக்கியிருந்தது, வியக்க வைக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான்.
இத்திரைப்படத்தில் எஸ்.பாலச்சந்தருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்களில் ஒருவர்தான் முக்தா சீனிவாசன். இவர் பின்னாளில் மிகப்பெரிய தயாரிப்பாளராக அறியப்பட்டார். இந்த நிலையில் முக்தா சீனிவாசனும், ஜாவர் சீதாராமனும் சிவாஜியின் மீது சந்தேகம் கொண்டு அவரை பரிசோதித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு புறப்படும்போதும் சிவாஜி கணேசன், அடுத்த நாளுக்கான வசனப்பிரதியை வாங்கிக்கொண்டு செல்வாராம். அதன் பின் அடுத்த நாள் படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் வசனங்களை வாசிக்க சொல்லிவிட்டு அதனை உள்வாங்கிக் கொண்டு பிசிறு தட்டாமல் வசனம் பேசுவாராம் சிவாஜி.
இதனை பார்த்த ஜாவர் சீதாரமனுக்கு ஒரு சந்தேகம் எழுந்ததாம். அதாவது சிவாஜி கணேசன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடியும்போதும் அடுத்த நாளுக்கான வசனப்பிரதியை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவதால் வீட்டிலேயே அந்த வசனங்களை மனப்பாடம் செய்துவிடுகிறார். ஆனால் அதற்கு அடுத்த நாள் அந்த காட்சிக்கான வசனங்களை உதவி இயக்குனரிடம் வாசிக்க சொல்லிவிட்டு அதனை உள்வாங்கி பேசுவது போல் சிவாஜி நடிக்கிறார் என்பதே அந்த சந்தேகம்.
இதனை உதவி இயக்குனர் முக்தா சீனிவாசனிடம் கூறினார் ஜாவர் சீதாராமன். இதனை தொடர்ந்து இருவரும் சிவாஜியை சோதித்து பார்த்துவிடலாம் என முடிவு செய்தனர்.
ஒரு நாள் சிவாஜியிடம் முக்தா சீனிவாசன் “இன்று எடுக்க திட்டமிட்டிருந்த காட்சியை தற்போது எடுக்கப்போவதில்லை. அந்த காட்சியில் நடிக்க இருந்த நடிகர்கள் இன்னும் வரவில்லை. ஆதலால் தற்போது வேறு ஒரு காட்சியை படமாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். நான் அந்த காட்சிக்கான வசனங்களை வாசித்து காண்பிக்கிறேன். அப்படியே உள்வாங்கி நடிக்கிறீர்களா?” என கூறினாராம்.
இதனை கேட்ட சிவாஜி உடனே “சரி” என்று தலையாட்டிவிட்டாராம். உடனே அந்த காட்சிக்கான வசனத்தை இரண்டு முறை வாசித்து காண்பித்தார் முக்தா சீனிவாசன். அந்த வசனங்களை உள்வாங்கிய சிவாஜி கணேசன் படப்பிடிப்பின்போது ஒரு சொல் கூட பிசிறாமல் பேசி நடித்தார் சிவாஜி. இதனை பார்த்த முக்தா சீனிவாசனுக்கும் ஜாவர் சீதாராமனுக்கும் ஆச்சரியம் தாங்கமுடியவில்லையாம். அதன் பின் இப்படிப்பட்ட மாபெரும் கலைஞனை சந்தேகப்பட்டுவிட்டோமே என வெட்கப்பட்டார்களாம்.
வேட்டையனை விட…
Nayanthara: நேற்று…
நயன்தாரா, தனுஷ்…
Jothika: தமிழ்…
Kanguva: இந்தியா…