எஸ்.ஏ.சியை கண்டபடி திட்டிய உதவி இயக்குனர்… இந்த சாதாரண விஷயத்துக்கா இப்படி??
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் “அவள் ஒரு பச்சைக் குழந்தை” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “பட்டணத்து ராஜாக்கள்”, “இதயம் பேசுகிறது” போன்ற பல திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக மாறிப்போனார். மேலும் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் தனது மகனான விஜய்யின் வளர்ச்சியில் ஒரு மிகப் பெரிய பங்கு வகித்தவராகவும் திகழ்கிறார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் ஒரு உதவி இயக்குனர் அவரை கண்டபடி திட்டியது குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த எஸ்.ஏ.சி, பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவரது அண்ணன், அவருக்கு ஒரு அலுவலகத்தில் மாதச் சம்பளத்தில் வேலை வாங்கிகொடுத்தார்.
ஆனாலும் அவருக்கு சினிமா வெறி போகவில்லை. பல கதைகளை எழுத தொடங்கினார். மேலும் அந்த கதைகளை நாடகமாக போடத்தொடங்கினார். அப்படி அவர் இயக்கிய நாடகம்தான் “பிஞ்சு மனம்”. இந்த நாடகத்தை பார்த்த டி.என்.பாலு என்ற இயக்குனர், எஸ்.ஏ.சந்திரசேகரை அணுகி “நாடகம் சிறப்பாக இருக்கிறது. என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறாயா?” என கேட்டிருக்கிறார்.
எஸ்.ஏ.சியும் சரி என்று ஒப்புக்கொள்ள, டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றத்தொடங்கினார். அப்போது “மனசாட்சி” என்று ஒரு திரைப்படத்தை டி.என்.பாலு இயக்கிக்கொண்டிருந்தார். அத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சி உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அப்போது ஒரு நாள் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். அன்று அந்த பாடலின் வரியையும் இசையையும் தனிதனியாக பிரித்து வைக்க வேண்டும். அந்த பணியை எஸ்.ஏ.சியிடம் கொடுத்தார்கள். ஆனால் அவர் புதிதாக பணியாற்ற வந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை.
உடனே அந்த படத்தின் அசோஸியேட் இயக்குனரிடம் சென்று அந்த சந்தேகத்தை கேட்டிருக்கிறார். ஆனால் அவரோ அனைவரின் முன்னிலும் அவரை கண்டபடி திட்டிவிட்டார். இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எஸ்.ஏ.சி, டி.என்.பாலுவிடம் சென்று “நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். என்னை அவமானப்படுத்திவிட்டார்கள்” என கூறியிருக்கிறார்.
அப்போது டி.என்.பாலு, “யோவ், இப்போத்தானே சினிமாவுக்குள்ளே வந்திருக்க. இது மாதிரியான அவமானங்கள் எல்லாம் சினிமாவில் சர்வ சாதாரணம். நீ பெரிய ஆளாக வந்துட்டேனா நிச்சயமா உன்னை மதிப்பாங்க. அதை நோக்கி நீ பயணப்படனும்” என அறிவுரை கூறியதால், எஸ்.ஏ.சி தனது முடிவை மாற்றிக்கொண்டாராம்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நடித்த மாஸ் ஹிட் திரைப்படம்… ரீமேக்கில் பின்னி பெடலெடுத்த ரஜினியும் கமலும்… இது தெரியாம போச்சே!