தனது நண்பரின் உயிரை காப்பாற்ற கொள்கையையே தூக்கி எறிந்த கலைவாணர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-04-20 23:27:00  )
NS Krishnan
X

NS Krishnan

எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் கொடை வள்ளல் என்று போற்றுகிறார்கள். ஆனால் கொடை வள்ளல் தன்மையில் எம்.ஜி.ஆருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். காலம் போற்றும் கலைவித்தகனாக திகழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது நடிப்பாலும் பகுத்தறிவு கருத்துக்களாலும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கலைவாணர் தொடக்கத்தில் நாடகத்துறையில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தார். அதனை தொடர்ந்து சினிமாத்துறையில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றார். இவர் நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் கூட. சார்லி சாப்ளின் உலகளவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்துகொண்டிருந்தபோது இந்தியாவின் சார்லி சாப்ளின் என அழைக்கப்பட்டார் கலைவாணர்.

கலைவாணரின் பெருந்தன்மையும் பரந்து விரிந்த சிந்தனையும் வியக்கவைப்பவை. ஒரு முறை நடிகை பானுமதி படப்பிடிப்பின்போது என்.எஸ்.கிருஷ்ணன் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அங்கே இருந்த ஒருவர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வத்திவைத்தார். அதற்கு என்.எஸ்.கே, “உனது கால் மேலயா அவர் கால் போட்டு உட்கார்ந்திருக்கார்? அவரோட கால் மேல் அவர் கால் போட்டு உட்கார்ந்திருக்கார். இதில் உனக்கு என்ன பிரச்சனை?” என கேட்டாராம். அந்தளவுக்கு மிகவும் பரந்த மனப்பானமை உடையவராக திகழ்ந்தார்.

இந்த நிலையில் என்.எஸ்.கே, தனது நெருங்கிய நண்பருக்காக தனது கொள்கையையே விட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

அதாவது பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த கே.சுப்ரமணியம் ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கே.சுப்ரமணியமும் என்.எஸ்.கிருஷ்ணனும் மிக நெருங்கிய நண்பர்கள். என்.எஸ்.கிருஷ்ணன் தீவிர நாத்திகர். பெரியாரை ஆதரிப்பவர்.

ஆனால் தனது நண்பரான கே.சுப்ரமணியம் நல்ல படியாக குணமாகி வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக சாமுண்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று தனது நண்பருக்காக வேண்டிக்கொண்டு ஒரு குங்கும பிரசாதத்தை எடுத்துகொண்டு நண்பரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அந்த குங்கும பிரசாதத்தை கொடுத்து அதனை நெற்றியில் வைத்துக்கொள்ளச் சொன்னார்.

அப்போது கே.சுப்ரமணியம், “நீங்கதான் நாத்திகர் ஆச்சே. நீங்க ஏன் கோவிலுக்கு போனீங்க?” என கேட்க, அதற்கு என்.எஸ்.கே., “நான் நாத்திகர்தான். ஆனால் நீங்கள் ஆத்திகர்தானே. நீங்கள் குணமாக வேண்டும் என்பதற்காகத்தான் கோவிலுக்கு சென்றேன்” என கூறியிருக்கிறார். தனது நண்பருக்காக தன் கொள்கையையே விட்டுக்கொடுத்திருகிறார் என்.எஸ்.கே.

Next Story