சமீபகாலமாகவே தமிழில் பீக்கில் இருக்கும் இளம் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழில் விஜயை வைத்து 3 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து படம் இயக்கினார். அந்த படம் 1300 கோடி வசூலை அள்ளியது. இப்போது புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் கதை, திரைக்கதையில் ஹாலிவுட் கலைஞர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். ஹாலிவுட்டில் வெளிவரும் சூப்பர் ஹீரோ கதை போல உலக தரத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறார் அட்லி. அடுத்து, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லோகேஷ் கனகராஜ். இவரின் படங்களை ரசிகர்கள் எல்.சி.யூ என கொண்டாடி வருகிறார்கள்.
கூலி படத்தை முடித்துவிட்டு அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவரும் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். நேற்றுதான் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள். லோகேஷ் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய இரும்புக்கை மாயாவி கதையை கொஞ்சம் மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வரும் நெல்சன் அடுத்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களை கமிட் செய்வதற்கே கஷ்டமாக இருப்பதாலும், தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் கிடைப்பதாலுமே தமிழ் சினிமா இயக்குனர்கள் தெலுங்கு சினிமா பக்கம் போவதாக சொல்லப்படுகிறது.
கைதி 2 படத்திற்கு லோகேஷுக்கு குறைவான சம்பளம் பேசப்பட்ட நிலையில், தெலுங்கில் 75 கோடி கொடுப்பதாக சொன்னதால் அங்கு போய்விட்டார் லோகேஷ். அதேநேரம், ராஜமவுலி தெலுங்கு நடிகர்களை வைத்து தெலுங்கில் மட்டுமே படம் எடுத்து அதை பேன் இண்டியா திரைப்படமாக மாற்றுகிறார். எனவே, கோலிவுட் இயக்குனர்கள் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என சினிமா விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.