அன்பே வா படத்தில் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு வந்த ஆசை... மறுத்த இயக்குனர்...
ஏவிஎம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் அன்பே வா. ஒரு தொழிலதிபர் நிம்மதியை தேடி சிம்லாவில் இருக்கும் தனது பங்களாவில் ஓய்வெடுக்க வர அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருப்பார்.
அந்த பங்களாவில் வேலை செய்யும் நாகேஷ் தனது முதலாளி என்று தெரியாமலே எம்.ஜி.ஆருக்கு அறை கொடுத்து அவரிடம் பணம் வாங்குவார். அதேபோல், அதேவீட்டில் தங்கியிருக்கும் சரோஜாதேவி எம்.ஜி.ஆரை எப்படியாவது அங்கிருந்து விரட்டவேண்டும் என திட்டம் போடுவார். அதை எம்.ஜி.ஆர் எப்படி முறியடிக்கிறார்? அவர்களுக்குள் எப்படி காதல் வந்தது? என்பதை அழகாக திரைக்கதை செய்திருப்பார் அப்படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்.
இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான், புதிய வானம் புதிய பூமி, லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் ஆகிய பாடல்கள் இனிமையான பாடல்களாக அமைந்தது. அதேபோல், இப்படத்தில் இடம் பெற்ற நாகேஷின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
வழக்கமாக எம்.ஜி.ஆர் படம் எனில் நிறைய சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இந்த படத்தில் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டுமே இடம் பெற்றிருக்கும். எனவே, படத்தின் கிளைமேஸ் காட்சியில் ஒரு அதிரடி சண்டைக்காட்சி வைக்கலாமா என அப்படத்தின் தயாரிப்பாளர் ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்குனரிடம் கேட்டுள்ளார். ஆனால், இயக்குனருக்கு அதில் விருப்பமில்லை. இந்த படத்தின் கதைக்கு அது செட் ஆகாது என சொல்லிவிட்டாராம். இதை மெய்யப்ப செட்டியார் எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இயக்குனர் சொல்வதுதான் சரி என அதையே சொன்னாராம்.
இந்த தகவலை நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவரின் யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கே.எஸ் ரவிக்குமாரின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட நபர்.. விரைந்த போலீஸ்.. நடந்தது தெரியுமா?..