பிரம்மாண்ட செலவில் ஒரு குடும்ப சென்டிமென்ட்!! அவதார்: தி வே ஆஃப் வாட்டர் எப்படி இருக்கு?? ஒரு சிறு விமர்சனம்…

by Arun Prasad |
Avatar 2
X

Avatar 2

கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் உருவான “அவதார்” திரைப்படம் அனிமேஷன் பட உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது இத்திரைப்படம். இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் “அவதார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Avatar 2

Avatar 2

“அவதார் தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படத்தை ஜேம்ஸ் காம்ரூன் இயக்க சாம் வொர்த்திங்டன், சோ சல்டானா, கேட் வின்ஸ்லட் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? இல்லையா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கதை

“அவதார்” திரைப்படத்தின் முதல் பாகத்தில், பாண்டோரா கிரகத்தின் நாவி இன மக்களில் ஒருவனாகவே மாறிப்போன ஜாக் சல்லி, மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அந்த இனத்தை காப்பாற்றுவதோடு அந்த படம் முடிவுக்கு வரும். இதனை தொடர்ந்து “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படத்தில் பாண்டோரா கிரகத்தில் நாவி இனத்தின் தலைவனாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான் ஜாக் சல்லி.

Avatar 2

Avatar 2

இந்த நிலையில் “அவதார்” முதல் பாகத்தில் பாண்டோரா கிரகத்தை ஆக்கிரமிக்க வந்த ராணுவ படைக்கு தலைமை தாங்கிய குவாட்ரிச், இரண்டாம் பாகத்தில் ஜாக் சல்லியை குடும்பத்தோடு பழி வாங்க அவதாராகவே கிளம்பி வருகிறான். இது ஜாக் சல்லிக்கு தெரிய வர, தனது குடும்பத்துடன் மெட்கைனா என்ற இனம் வாழும் கடல் பகுதிக்குச் சென்று தஞ்சமடைகிறான். ஜாக் சல்லியை துரத்தி வரும் குவாட்ரிச், மெட்கைனா பகுதிக்குள்ளும் நுழைகிறான். இறுதியில் தனது குடும்பத்தை குவாட்ரிச்சிடமிருந்த ஜாக் சல்லி காப்பாற்றினானா? இல்லையா? என்பதே கதை.

கிராபிக்ஸ் தாறுமாறு

பண்டோரா இன கதாப்பாத்திரங்களை கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டுத்தான் உருவாக்கி இருக்கிறார்கள் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு துளி கூட ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரங்களை கிராபிக்ஸில் ஒவ்வொரு பிரேமிலும் யதார்த்த மனிதர்களை போலவே உருவாக்கி இருக்கிறார்கள்.

Avatar 2

Avatar 2

பிளஸ்கள்

கிராபிக்ஸ் இத்திரைப்படத்தின் பெரிய பிளஸ் என்றாலும், முதல் பாகத்தில் முழுக்க முழுக்க போரை அடிப்படையாக வைத்தே கதை பின்னப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் குடும்ப சென்டிமென்ட்டில் உருக வைத்திருக்கிறார் இயக்குனர். இது பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றிப்போக வைக்கிறது.

Avatar 2

Avatar 2

அதே போல் முதல் பாகத்தில் பாண்டோரா என்ற கிரகத்தின் ஒரு பகுதியை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்திலோ பாண்டோரா கிரகத்தின் பல்வேறு பகுதிகளை காட்டியிருக்கிறார்கள். இது பார்வையாளர்களுக்கு வியப்பை தருகிறது.

Avatar 2

Avatar 2

மைனஸ்கள்

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள், கிராபிக்ஸ் தொழில்நுட்பம், காட்சிப்படுத்திய விதம் ஆகிய எல்லாவற்றிலும் இயக்குனர் கிளாப்ஸ்களை அள்ளுகிறார். ஆனால் திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டார் என்றுதான் கூறமுடியும். இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக சென்றாலும், முதல் பாதி ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுகிறது. எனினும் “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பிரம்மாண்ட திரைப்படமாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story