வெள்ளிவிழாவும், பொன்விழாவும்...அரங்கேறிய அதிசயம்...! நான்கு தேசிய விருதுகள் பெற்ற படம் தான் காரணம்...!!
ஏவிஎம் மின் பொன்விழா ஆண்டில் எடுத்த மின்சார கனவு படத்தைப் பற்றி ஏவிஎம். சரவணன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இவை.
எங்களது முதல் படம் நாம் இருவர். 1997ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்திற்கு பொன்விழா ஆண்டு. பம்பாயில் நடைபெற்ற ஒரு விழா தான் எங்களது பொன்விழா ஆண்டை ஒட்டி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று உறுதியான எண்ணத்தைத் தந்தது.
பல நண்பர்கள் ஏன் படம் எடுக்காமல் இருக்கிறீர்கள்? என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக ஆல்பட் மாரியப்பனும், பாரதி கண்ணன் என்ற நண்பரும் என்னைப் பர்க்க வரும்போலெ;லாம் இதைத் தான் சொல்வார்கள். என்ன தான் உங்களுக்கு டிவி மீது கவனம் இருந்தாலும் இப்படி சினிமா எடுக்காமல் இருக்கக்கூடாது என்பார்கள்.
நீங்க ஏன் பிரபுதேவாவை புக் பண்ணக்கூடாது என்று மாரியப்பன் ஐடியா கொடுத்தார். பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்தோம். பிறகு நண்பர் ராஜிவ் மேனன் மூலமாக ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்கக் கேட்டிருந்தோம். ஆனால் ரகுமான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
மாடர்ன் அவுட்லுக் இருக்கிற இயக்குனராக இருக்க வேண்டும் என்று விரும்பினார் ரகுமான்.
எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ராஜிவ் மேனனை அழைத்தேன். ரகுமான் இப்படி விரும்புகிறார். நீங்க 30 வினாடிகளில் அருமையா கதை சொல்றீங்க. அப்படிப்பட்ட திறமை இருக்கும்போது ஏன் நீங்கள் ஒரு முழுப்படம் பண்ணக்டாது என்று உரிமையுடன் கேட்டேன்.
முதலில் மறுத்த ராஜிவ் மேனன் பிறகு ஒப்புக்கொண்டார். ரகுமானிடம் சொன்னார். நீ படம் டைரக்ட் பண்றதாயிருந்தா நான் மியூசிக் பண்றேன் என்றார் ரகுமான்.
அதன் பின்னர் அரவிந்தசாமி, கஜோல் என்று பல கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்தோம். படத்தயாரிப்பு வேலைகள் தொடங்க இருந்த சமயத்தில் ராஜிவ் மேனன் என்னிடம் ஒரு கண்டிஷன் என்றார். என்ன? என்று கேட்டேன்.
நீங்க என் வொர்க்ல தலையிடாம இருந்தா நான் பண்றேன். எனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்றார். படத் தயாரிப்பு முழுவதையும் என் மகன் குகன் பார்த்துக் கொண்டான். அந்தப்படம் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே 40 வயதுக்குட்பட்டவர்கள் தான்.
பூ பூக்கும் ஓசை என்று ஒரு பாடல். அதைப் படமாக்கும்போது முதலில் ஊட்டியில் ஒரு ஸ்கூல். பிறகு ஸ்டூடியோ. பிறகு தடாவில் சில வரிகள். தொடர்ந்து குலு, மனாலி என்று இப்படி ஒரு பாடல் காட்சிக்கு அதிகபட்ச லொகேஷன்களில் எடுத்த பாடல் அதுதான்.
படத்தை வெள்ளிவிழாவாக்க வைரமுத்துவை அழைத்துக் கொண்டு கலாநிதி மாறனிடம் போனோம். உடனே அதற்கும் அவர் சம்மதித்தார். மாறன், கே.சண்முகம், மிஸஸ் லால் ஆகியோருடன் விளம்பர யுக்திகள் அமைத்து படத்திற்கான எதிர்பார்ப்புகளைத் தூண்டினோம்.
மின்சாரக் கனவு படத்திலிருந்து சில கேள்விகளுக்கு ரசிகர்களைப் பதில் சொல்வது, த்ரீ ரோஸஸ் நிறுவனத்துன் இணைந்து மின்சாரக் கனவு சிறப்பு ரயில் விடுவது போன்றவை எல்லாம் அப்போது உருவான ஐடியாக்கள். விளம்பரங்கள் படத்தை வெள்ளிவிழாவிற்கு அழைத்துச் சென்றன.
படத்தின் வெள்ளிவிழாவும், ஏவிஎம்மின் பொன்விழாவும் ஒரே மேடையில் அரங்கேறின. படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த இசை அமைப்பாளருக்கு ஏ.ஆர்.ரகுமானும், சிறந்த பின்னணிப் பாடகருக்கு எஸ்.பி.பி.யும், சிறந்த நடன அமைப்புக்கு பிரபுதேவாவுக்கும், சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது சித்ராவுக்கும் கிடைத்தது. சென்னை ஆல்பட் தியேட்டரில் இந்தப்படம் 216 நாள்கள் ஓடி சாதனைப் படைத்தது.