முதல் படத்திலேயே பெருத்த ஏமாற்றம்....கை எலும்பு முறிந்தவர் ஹேண்ட்சம் ஹீரோவான அதிசயம்!
தனது பெயருக்கு முன்னால் ஒரு பட நிறுவனத்தின் பெயரையே வைக்கிறார் என்றால் அவருக்கு அந்த நிறுவனத்தின் மேல் எவ்வளவு ஈர்ப்பு இருக்க வேண்டும். அவருடைய பெயருக்கு ஏற்ப சினிமாவில் ராஜனாக வலம் வந்தார். அவர் தான் நடிகர் ஏவிஎம் ராஜன். இவரைப் பற்றி சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
வட்ட வடிவ அழகிய முகம், கம்பீரத் தோற்றப் பொலிவு. நடிகர் திலகம் சிவாஜி, ஜெமினிகணேசனை நினைவுபடுத்தும் விதத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். நல்ல குரல் வளம், ஏற்ற இறக்க உச்சரிப்பு, சென்னை கவர்னர் மாளிகையில் ஆரம்பகாலத்தில் பணியாற்றிய பட்டதாரி. முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தவர்.
காசே தான் கடவுளப்பா, நாதஸ்வர ஓசையிலே, பூஞ்சிட்டு கன்னங்கள், செந்தாமரையே செந்தேன் இதழே என்ற பாடல்களைக் கேட்டவுடனே இவரது நினைவு தான் நமக்கு வரும். அவர் வேறு யாருமல்ல. நடிப்பில் தாய்மார்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட ஏவிஎம். ராஜன் தான்.
ஆன்மிக படங்களில் அசத்தியவர். இக்கால மதபோதகர் ஏவி.எம்.ராஜன். இவருக்கு ஏவிஎம் ராஜன் என்ற பெயர் வந்தது சுவாரசியமான விஷயம். முதன் முதலில் தான் நடித்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்தது. அதனால் அந்த நிறுவனத்தின் பெயரையே தனக்கு அடைமொழியாக வைத்துக் கொண்டார்.
1935 திருச்சி அருகில் உள்ள புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம். தந்தை சிறந்த முருக பக்தர். சேவை செய்ய ஆசிரமத்தை நிர்வகித்து வந்தார்.
புதுக்கோட்டையில் கல்வி கற்றார். ஆரம்பத்தில் காவல் துறை அதிகாரியாகவே விரும்பினார். ஆனால் படிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ராஜனின் ஒரு கை எலும்பு முறிந்தது. அதனால் அவரது ஆசை நிராசையானது. தொடர்ந்து பி.ஏ.கணிதம் படித்தார். சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த சம்பளம் பற்றாக்குறையாக இருந்தது. தனது தந்தையின் நண்பர் பாடலாசிரியர் கு.ச.கிருஷ்ண மூர்த்தியை நாடிச்சென்றார்.
ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் வாழ்விலே என்ற பாடலையும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தில் வரும் எளியோரை தாழ்த்தி என்ற பாடலும் உள்பட பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தான் அவர். திரைத்துறையில் நடிகராக முயற்சி செய்யச் சொன்னார். தானே அதற்கான வாய்ப்பும் தேடிக் கொடுத்தார்.
அதன்படி, 1957ல் வெளியான சிவகங்கைச் சீமை என்ற படத்தில் சில காட்சிகளில் தோன்றினார் ஏவிஎம்.ராஜன். படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காட்சிகளின் நீளம் கருதி ராஜனின் காட்சிகள் மட்டும் வெட்டப்பட்டது தான் சோகம். தான் பாடலாசிரியராகும் திரைப்படத்தில் ராஜனுக்கும் வாய்ப்புத் தேடிக் கொடுத்தார் கவிஞர்.
பிரபல நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான 1000 காலத்துப் பயிர் என்ற படத்தில் அறிமுகமானார். ஏவிஎம் நிறுவனத்தில் மாத சம்பள கலைஞராக இணைந்தார். ஆரம்பத்தில்; 100 ரூபாயில் ஆரம்பித்த இவரது மாதச்சம்பளம் 250 ரூபாயாக உயர்ந்தது. இது ராஜனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
1963ல் ஏவிஎம் மின் ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் வெளியான நானும் ஒரு பெண் படத்தின் மூலம் ஹேண்ட்சம் ஹீரோவாக மாறினார். இந்தப்படத்தின் மூலம் ராஜன் என்று அறிமுகமானவர் அடுத்தடுத்த படங்களில் ஏவிஎம் ராஜன் ஆனார்.
இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்ஜிஆருடன் நவரத்தினம், சிவாஜியுடன் பார் மகளே பார், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு, தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், சிவகாமியின் செல்வன், மனிதரில் மாணிக்கம் மற்றும் எஸ்எஸ்ஆருடன் அல்லி, எம்ஆர் ராதாவுடன் எங்க வீட்டு பெண், ஜெமினிகணேசனுடன் வீர அபிமன்யு, பந்தயம், திருமகள்,
கே.பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த், முத்துராமனுடன் கொடி மலர், சந்திரபாபுவுடன் தட்டுங்கள் திறக்கப்படும், பி.ஆர். பந்துலுவின் நம்ம வீட்டு லட்சுமி, சோ.வுடன் மனம் ஒரு குரங்கு, ஜெய்சங்கருடன் ஜீவனாம்சம், ரஜினியுடன் தாய் மீது சத்தியம், பில்லா, தீ போன்ற படங்களில் நடித்து நடிப்பில் தனி முத்திரை பதித்தார்.
துளசிமாடம், சித்ராங்கி, என்னதான் முடிவு, கற்பூரம், சக்கரம், பூவும் பொட்டும், அன்னையும் பிதாவும், அனாதை ஆனந்தன், தரிசனம், புகுந்த வீடு, மணிப்பயல், துலாபாரம், மகளுக்காக ஆகிய படங்கள் இவரது மாபெரும் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின.
இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் வீரன் வேலுத்தம்பி. தயாரிப்பாளராக இவர் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். காலச்சூழலால் கிறிஸ்தவ மதபோதகரானார். கற்பூரம் படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மீனாட்சியை மணம் புரிந்தார். 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். தொடர்ந்து தன்னுடன் நடித்த புஷ்பலதாவைக் காதல் மணம் செய்தார். இத்தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர்.