இக்கட்டான சூழலில் பிரச்சனையை சாமர்த்தியமாகத் தீர்த்த இயக்குனர் ... என்ன செய்தாருன்னு தெரியுமா?
தமிழ்த்திரை உலகில் பல்வேறு சம்பவங்கள் நம்மை வியப்பூட்டும் வகையில் நடந்தது உண்டு. அவற்றில் பலவற்றை நாம் பார்த்திருப்போம்.
ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன் தன் திரையுலக அனுபவங்களில் இருந்து பார்த்தால் பசிதீரும் படம் உருவானது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
ஏ.சி.திருலோகசந்தர்
அசோகன் ஒரு குழந்தை மாதிரி. கள்ளம் கடபம் இல்லாதவர். மனம் விட்டு பர்சனலாகப் பேசுவார். பிரச்சனைகள் என்றால் என் யோசனைகளையும் அறிவுரைகளையும் தவறாமல் கேட்பார்.
அடிக்கடி யாரையாவது அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம். அப்படி என்னிடம் அவர் அறிமுகப்படுத்தியவர் தான் ஏ.சி.திருலோகசந்தர்.
இவர் நிறைய கதைகள் வச்சிருக்கார். ரொம்ப அழகாக சொல்வார். நீங்க ஒருநாள் கேக்கணும் என்றார். சரியென்று நானும் ஒருநாள் கதை கேட்டேன்.
அவள் அளித்த வாழ்வு
அவர் சொன்னதில் அவள் அளித்த வாழ்வு என்ற கதை எனக்குப் பிடித்திருந்தது. அதை அப்பாவிடம் கொடுத்தேன். அந்த பைலை வாங்கி தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.
ஒருமுறை அந்தக் கதையைப் படமாக்குவது குறித்து பேச்சு வந்தது. இந்தப்படத்தின் கதை தான் திருலோகசந்தரின் கதை. இயக்கியது ஏ.பீம்சிங். படத்தின் பெயர் பார்த்தால் பசி தீரும்.
டைட்டில் கார்டு பிரச்சனை
படத்தில் சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜாதேவி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்போது டைட்டில் கார்டு போடுவதில் பிரச்சனை வந்துவிட்டது. யாருடைய பெயரை முதலில் போடுவது என்று.
உடனே நான் தான் சார் சீனியர் என் பெயர் தான் சரோஜாதேவிக்கு முன்னே வர வேண்டும் என்றார் சாவித்ரி. ஆனால் எல்லோருக்கும் சீனியர் நடிகை சரோஜாதேவி.
ஆனால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கிறபடி நான் டைட்டில் கார்டு போடுறேன். நீங்க கவலைப்படாதீங்க என்றார் டைரக்டர் பீம்சிங்.
அருமையான ஐடியா
எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியலையே எனக்கு கவலையாக இருந்தது. அதே சமயம் அவர் அந்தப்பிரச்சனையை எப்படி தீர்க்கப்போகிறார் என்று ஒரு ஆர்வமும் இருந்தது.
கடைசியில் இயக்குனர் பீம்சிங் ஒரு அருமையான ஐடியா செய்தார். உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என்று போட்டு கீழே எல்லோரது புகைப்படங்களையும் போட்டு விட்டார்.
கதையில் சில மாற்றங்கள் செய்து படமாக்கப்பட்டது. அந்த வகையில் எனக்கு சிறு மனக்குறை இருந்தது. ஏ.சி.திருலோகவந்தரின் திரைக்கதை மிக அருமையாக இருந்தது.
அந்த மாற்றங்களால் தான் படம் சரியாகப் போகவில்லை. அதே நேரம் படம் பெரியஅளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு ஓடியது.
கொடி அசைந்ததும்....
1962ல் இந்தப்படம் வெளியானது. கமல் சிறுவனாக இந்தப்படத்தில் நடித்துள்ளார். பாபுவாகவும், குமாராகவும் கமல் இரு வேடங்களில் நடித்துள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளனர். பாடல்கள் அனைத்தும் அருமை.
அன்று ஊமைப் பெண்ணல்லோ, கொடி அசைந்ததும், பார்த்தால் பசி தீரும், பிள்ளைக்கு தந்தை ஒருவன், உள்ளம் என்பது, யாருக்கு மாப்பிள்ளை யாரோ ஆகிய மனது மறக்காத பாடல்கள் உள்ளன. அத்தனையையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.