அயோத்தி கதை திருடப்பட்டது இப்படித்தான்… பிரபல திரைக்கதை ஆசிரியர் சொன்ன அதிர்ச்சி தகவல்…
சசிக்குமார், குக் வித் கோமாளி புகழ், பிரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் கடந்த 3 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “அயோத்தி”. இத்திரைப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதே பல சர்ச்சைகள் வெடித்தன. இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறிய கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்று கூறப்பட்டது.
ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோது எழுத்தாளர் நரன் என்பவர் தனது “வாரணாசி” என்ற கதையில் வருவது போலவே இத்திரைப்படத்தின் காட்சிகள் இருக்கின்றன என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து எழுத்தாளர் மாதவராஜ் என்பவர், தனது “அழுவதற்கு கூட திராணியற்றவர்கள்” என்ற கதையில் வருவது போலவே இத்திரைப்படத்தின் காட்சிகள் இருக்கின்றது என கூறியிருந்தார்.
மேலும் திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ் என்பவர், தனது சமூக வலைத்தளத்தில், “என்னுடைய திரைக்கதையை சற்று மாற்றி என்னுடைய அனுமதி இல்லாமல் அதனை படமாக்கியிருக்கிறார்கள்” என கூறினார். இம்மூவரின் பதிவுகளை தொடர்ந்து “அயோத்தி” திரைப்படத்தின் மீது இணையத்தில் பல சர்ச்சைகள் கிளம்பின. இது குறித்து விவாவதங்களும் நடந்தது.
இந்த நிலையில் திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, “அயோத்தி” திரைப்படம் உருவானது குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“முதலில் இயக்குனர் மந்திரமூர்த்தி, அக்கறை புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியதாக ஒரு கதையை என்னிடம் கொண்டு வந்தார் மந்திரமூர்த்தி. பாட்னாவில் இருந்து ஒரு குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வருகிறது. அப்போது தமிழ்நாட்டில் அவர்களுக்கு விபத்து நடக்கிறது. அதில் ஒருவர் இறந்துவிடுகிறார். அந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் உதவி செய்து, அவர்களை மீண்டும் பாட்னாவிற்கு அனுப்புவதுதான் கதை.
இந்த கதையை திரைக்கதையாக உருவாக்க என்னை பணித்திருந்தார் மந்திரமூர்த்தி. இதில் பாட்னா என்ற ஊரை அயோத்தி என்று மாற்றினேன். மேலும் பல காட்சிகளை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 8 மாதங்களாக இந்த பணி நடந்தது.
அதன் பின் கொரோனா காலகட்ட நெருக்கடியால் அக்கறை புரொடக்சன்ஸ் மூடப்பட்டது. அதற்கு பிறகு இந்த படம் குறித்து எந்த வித கலந்துரையாடலும் நடக்கவில்லை. அதன் பின் அயோத்தி படத்தின் டிரைலரை பார்த்தபோது நான் எழுதிய திரைக்கதையை என்னுடைய அனுமதியே இல்லாமல் பயன்படுத்தியது தெரியவந்தது.
அயோத்தி படத்தை பார்த்தபோது நான் எழுதிய திரைக்கதையில் சில காட்சிகளை மட்டும் மாற்றி படமாக்கியிருப்பது தெரிய வந்தது. எனக்கான அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. எனது பெயரை எங்கும் குறிப்பிடவும் இல்லை. ஆதலால் மந்திரமூர்த்தியின் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து எழுத்தாளர் நரன், எஸ்.ராமகிருஷ்ணனை தொலைப்பேசியில் அழைத்து இது குறித்து கேட்டபோது, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதையை உருவாக்கி வைத்திருந்தேன். அந்த கதைதான் அயோத்தி” என கூறியிருக்கிறார்.
அதற்கு நரன், “நீங்கள் உருவாக்கிய ஒரிஜினல் கதையை படிக்க தரமுடியுமா?” என கேட்டதற்கு எஸ்.ராமகிருஷ்ணன், “சினிமாவுக்காக நான் உருவாக்கிய கதைகளை எழுதிவைப்பதில்லை” என கூறினாராம். மேலும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கதை திருட்டு என்பது புதிய விஷயம் அல்ல என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நரன்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “பாபா”, “சண்டக்கோழி”, “உன்னாலே உன்னாலே”, “தாம் தூம்”, “அவன் இவன்” போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பானுமதியை காத்திருக்க வைத்துவிட்டு ரொமான்ஸில் இறங்கிய ரோஜா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?