பாட்ஷா என்னுடைய படம்தான்- ஷாக் கொடுத்த மனோபாலா… புதுசா இருக்கே!!

by Arun Prasad |
பாட்ஷா என்னுடைய படம்தான்- ஷாக் கொடுத்த மனோபாலா… புதுசா இருக்கே!!
X

1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “பாட்ஷா”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆர். எம். வீரப்பன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் கேரியரிலேயே முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது “பாட்ஷா”. இப்படம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களை உருவாக்கியது. அந்தளவுக்கு ரஜினியின் மாஸ் லெவலை ஏற்றிக்காட்டிய படம் இது.

இந்த நிலையில் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முன்பு “பாட்ஷா” திரைப்படத்தை மனோபாலாதான் இயக்க இருந்தாராம். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து “ஊர்க்காவலன்” என்ற ஹிட் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இது குறித்து மனோபாலா சமீபத்திய பேட்டி ஒன்றில் “பாட்ஷா திரைப்படத்தை முதலில் நான்தான் இயக்குவதாக இருந்தது. சத்யா மூவீஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆனது. ஆனால் பாலச்சந்தர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்துவிட்டார். எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நேராக ரஜினிகாந்தை பார்க்கச் சென்றேன். அவரிடம் நான் என்ன தப்பு செய்தேன், நீங்கள் எப்படி ஒரு டைரக்டரை மாற்றலாம் என கேட்டேன்.

அதற்கு ரஜினிகாந்த், நீங்கள்தான் (மனோபாலா) இத்திரைப்படத்தை இயக்கப்போகிறீர்கள் என எனக்கு தெரியாது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போகிறார் என்றுதான் என்னிடம் கூறினார்கள். ஆதலால்தான் நானும் சரி என்று சொன்னேன் என கூறினார். அதன் பின் அவர் வீட்டில் மோர் சாப்பிட்டுவிட்டு எனது கோபத்தை குறைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்” என நகைச்சுவைத் தொனியில் கூறினார்.

மனோபாலா நடிகர் மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். “பிள்ளை நிலா”, “சிறைப்பறவை”, “என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்” என பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மணோபாலா. மேலும் ஹிந்தி, கன்னடா ஆகிய மொழிகளிலும் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story