ஜெமினி கணேசன் செய்த வேலை! - கடுப்பாகி கதை சொல்லாமல் எழுந்து சென்ற பாலச்சந்தர்..
நாடகங்களை இயக்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் பாலச்சந்தர். ஒரே மாதிரி கதைகளை எடுத்து வந்த தமிழ் சினிமாவில் வித்தியாசமான, புரட்சிகரமான கதைகளை எழுதி இயக்கியவர் பாலச்சந்தர்தான். குறிப்பாக பெண்களின் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை இயக்கியுள்ளார். அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், கல்கி என பல படங்களை இயக்கியுள்ளார்.
அதேபோல் நாகேஷை வைத்து அவர் இயக்கிய எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கமலை ஒரு பண்பட்ட நடிகராக மாற்றியது பாலச்சந்தர்தான். அதோடு, ரஜினியை அறிமுகம் செய்தவரும் இவரே.
பாலச்சந்தர் எழுதி இயக்கிய மேஜர் சந்திரகாந்த் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்திரிக்கைகளும் பாராட்டி எழுதியது. இந்து ரங்கராஜன் அந்த நாடகத்தை படமாக எடுக்க ஆசைப்பட்டார். ஜெமினியை ஹீரோவாக போட்டு படத்தை அவர் எடுக்க விரும்ப, பாலச்சந்தரும் சம்மதித்தார்.
எனவே, ஜெமினி கணேசனிடம் கதை சொல்ல பாலச்சந்தரை தனது காரில் ரங்கராஜன் அழைத்து சென்றார். அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்த பெரிய நடிகராக ஜெமினி கணேசன் இருந்தார். அவர்கள் சென்ற நேரம் இயக்குனர் ஸ்ரீதர் கல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வருவதாகவும், அவரை அழைக்க ஏர்போட் செல்வதால் செல்லும் வழியில் காரிலேயே கதை கேட்கிறேன் என ஜெமினி கணேசன் சொல்லிவிட்டார்.
பாலச்சந்தருக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் வேறு வழியின்றி காரில் ஏறிக்கொண்டார். காரில் பாலச்சந்தர் கதை சொல்லும்போது இடையிடையே ரங்கராஜனிடம் ஜெமினி ஏதேதோ பேசி வந்தார். இது பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கார் விமான நிலையத்தை அடைந்ததும் தான் போய் ஸ்ரீதரை பார்த்துவிட்டு வந்து மீதி கதையை கேட்பதாக கூறிவிட்டு ரங்கராஜனுடன் ஜெமினி சென்றுவிட்டார். இதற்காகவே காத்திருந்தது போல பாலச்சந்தர் காரிலிருந்து கீழே இறங்கி ஒரு வாடகை காரை பிடித்துக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.
அதன்பின் அதே ஜெமினி கணேசனை வைத்து இரு கோடுகள் படத்தை பாலச்சந்தர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.