அவன்தான் எனக்கு அத சொல்லி தரணுமா?.. எனக்கு அறிவு இல்லையா?!.. பிரபலத்திடம் எகிறிய பாலச்சந்தர்..
பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே அமைந்திருக்கும். இப்போதும் அவரது பல திரைப்படங்கள் காலம் தாண்டியும் பேசப்படுவது உண்டு. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் உருவாக காரணமாக இருந்தவர்.
இவ்வாறு பல பெருமைகள் கொண்ட பாலச்சந்தர் ஒரு முறை தன்னை விமர்சித்த பத்திரிக்கையாளர்களை வீட்டிற்கு அழைத்து வந்து காபி கொடுத்து திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
பாலச்சந்தரை வம்பிழுத்த சுபா
கே.பாலச்சந்தர் இயக்கிய “சிந்து பைரவி” திரைப்படத்தில் கதாநாயகனும் ஒரு பெண்ணும் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை குறியீடாக சொல்ல நினைத்து, ஒரு உறை மூடியபடி இருக்கும் வீணையின் உறையை உருவிவிட்டது போல் ஒரு காட்சியை பயன்படுத்தியிருந்தாராம்.
இத்திரைப்படம் வெளிவந்தபோது பிரபல எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலகிருஷ்ணன்) அப்போது கல்கி இதழில் திரைப்பட விமர்சகர்களாக இருந்தார்களாம். அந்த சமயத்தில் பிரபல எழுத்தாளரான பாலகுமாரன் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தாராம். பாலகுமாரன் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் வாசகர்.
தி.ஜானகிராமன் ஒரு நாவலில் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையை பகிர்ந்துகொண்ட சம்பவத்தை குறியீடாக கூறுவதற்காக “உறை உருவிவிட்ட வீணை போல் அவள் கிடந்தாள்” என்று குறிப்பிட்டிருப்பாராம். ஆதலால் அந்த படத்திற்கு சுபா விமர்சனம் எழுதும்போது “இந்த குறிப்பிட்ட காட்சிக்கு பாலகுமாரன்தான் உபயமா?” என்று எழுதிவிட்டார்களாம்.
கண்டபடி திட்டிய பாலச்சந்தர்
அதன் பின் ஒரு நாள் அவர்கள் பாலச்சந்தரை பேட்டி எடுக்கும் நிலையும் வந்திருக்கிறது. அப்போது பாலச்சந்தர் அவர்களை வீட்டிற்குள் அழைத்து உட்காரவைத்து மிகவும் சுவையான காபியை கொடுத்திருக்கிறார். அவர்கள் காபியை குடித்து முடித்தவுடன், “காபியை குடித்துவிட்டீர்களா? இப்போது நான் உங்களை திட்டப்போகிறேன்” என்று கூறிவிட்டு கண்டபடி திட்டினாராம்.
“அது என்ன? பாலகுமாரன்தான் எனக்கு தி.ஜானகிராமனை அறிமுகப்படுத்த வேண்டுமா? அவன் இல்லைன்னா எனக்கு தி.ஜானகிராமனே தெரியாதா? தி.ஜானகிராமன் நாவலில் இருந்து எடுத்திருக்கிறீர்களா என்று எழுதியிருந்தால் கூட நான் ஒன்றும் சொல்லிருக்க மாட்டேன். அது என்ன பாலகுமாரன்தான் உபயமா என்று கேட்டிருக்கிறீர்கள். அது எப்படி சொல்லலாம் அந்த மாதிரி?” என கண்டபடி திட்டிவிட்டு அதன் பின் பேட்டியை தொடரும்படி கூறினாராம். இந்த சம்பவத்தை எழுத்தாளர்களான சுபா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.