“இவனுக்கு நடிப்பே வராது, அந்த நடிகரை கூப்பிட்டு வாங்க”… ரஜினியை கண்டபடி திட்டிய பாலச்சந்தர்…
சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடி எடுத்துவைத்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவர். இத்திரைப்படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்காக பாலச்சந்தர் ரஜினியை தேர்தெடுத்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது.
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரஜினி
ஒரு நாள் கே.பாலச்சந்தர் தனது உதவியாளர் ராமுடு என்பவருடன் சென்னை தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்றபோது அங்கே மாணவர்களில் ஒருவராக இருந்த ரஜினிகாந்த்தை பார்த்துள்ளார். மாணவர்களுடனான கலந்துரையாடல் முடிந்த பிறகு கே.பாலச்சந்தர் ரஜினிகாந்தை அழைத்து “உனது பெயர் என்ன?” என கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் “சிவாஜி ராவ்” என கூறியிருக்கிறார். “தமிழ் தெரியுமா?” என கேட்டபோது “தெரியாது” என கூறினாராம் ரஜினிகாந்த். அப்போது கே.பாலச்சந்தர் ரஜினியை பார்த்து “நாம் மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
கருப்பா துருதுருன்னு ஒரு பையன்
அதன் பின் சில நாட்களுக்குப் பிறகு பாலச்சந்தர் தனது உதவியாளர் ராமுடு என்பவரை அழைத்து, “பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் கருப்பாக துருதுருவென இருக்கும் கன்னட இளைஞன் ஒருவனை பார்த்தோம், நியாபகம் இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு ராமுடு “ஞாபாகம் இல்லை” என கூறியிருக்கிறார். “அவனை தேடிக் கண்டுபிடித்து கூப்பிட்டு வா” என கூறினாராம் பாலச்சந்தர்.
இதனை தொடர்ந்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சல்லடை போட்டு தேடிய ராமுடு, ஒரு வழியாக ரஜினிகாந்த்தை கண்டுபிடித்துவிட்டாராம். ராமுடு ரஜினிகாந்த்தை பாலச்சந்தரிடம் அழைத்து வந்திருக்கிறார். “நான் ஒரு படம் இயக்கப்போகிறேன். அந்த படத்தில் உனக்கு வாய்ப்புத் தருகிறேன். சின்ன ரோல்தான். அடுத்த படத்தில் உனக்கு பெரிய ரோலாக தருகிறேன்” என பாலச்சந்தர் கூறினாராம். ரஜினிகாந்த்தும் ஆவலோடு சரி என ஒப்புக்கொண்டாராம். இப்படித்தான் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்ற பெயரில் அறிமுகமானார் சிவாஜி ராவ்.
கண்டபடி திட்டிய பாலச்சந்தர்
1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அவர்கள்”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கொஞ்சுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் ரஜினிகாந்த், பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் நடிக்கவில்லையாம்.
பல முறை டேக் சென்றும் அவர் நினைத்தது போல் வரவில்லையாம். அப்போது கோபத்தில் ரஜினியை “இவனுக்கு நடிப்பே வராதுப்பா. பேசாம ஜெய்கணேஷை கூப்பிட்டு வாங்க” என கூறி கண்டபடி திட்டிவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் பாலச்சந்தரின் மனதில் வெகு நாட்கள் உறுத்திக்கொண்டே இருந்ததாம்.
இதையும் படிங்க: ஷோபா தற்கொலை மர்மம்… “அது எனக்கு மட்டும்தான் தெரியும்”… பாலு மகேந்திரா மறைத்த உண்மை என்ன??
பின்னாளில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபோது ஒரு நாள் ரஜினிகாந்திடம் “அன்று அவர்கள் படத்தின் படப்பிடிப்பில் உன்னை கோபமாக திட்டிவிட்டுட்டேன்ல” என கேட்டாராம். அதற்கு ரஜினிகாந்த் “ஆமா சார். திட்டுனது மட்டுமல்ல, ஜெய்கணேஷை வேற கூப்பிட்டு வரச்சொல்லிட்டீங்க” என சிரித்தபடியே கூறினாராம். ரஜினி இவ்வாறு சிரித்தபடியே கூறிய பின்புதான் பாலச்சந்தரின் மனம் ஆசுவாசம் அடைந்ததாம்.