நாசருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என சிம்பாளிக்காக சொன்ன பாலச்சந்தர்… அதுவும் எப்படி தெரியுமா?
நாசர் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். நாசர் இளம் வயதில் இருக்கும்போதே அவரை நடிகராக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் அவரது தந்தை. நாசருக்கு கூட நடிப்பதில் விருப்பம் இல்லையாம். எனினும் தந்தையின் ஆசைக்காக சென்னை ஃபிலிம் சேம்பரில் நடிப்பு பயின்றார். அதன் பின் சூழ்நிலை காரணமாக தாஜ் ஹோட்டலில் பணிபுரிந்தார்.
பிலிம் சேம்பரில் படித்து முடித்திருந்தாலும் தான் ஒரு நடிகராகி விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லையாம். ஆதலால் தரமணி இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தார் நாசர். அங்கு படித்தபோது பாலச்சந்தரின் ஒர்க் ஷாப் அடிக்கடி நடக்குமாம். நாசர் தனது படிப்பை முடித்த பிறகு, பாலச்சந்தரிடம் வாய்ப்பு கேட்டு பல முறை சென்றிருக்கிறார்.
ஒரு நாள் பாலச்சந்தரின் உதவியாளரான அருண்மொழி என்பவரின் மூலமாக பாலச்சந்தரிடம் இருந்து நாசருக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே பாலச்சந்தரை பார்க்க ஓடினாராம் நாசர். அந்த சமயத்தில் பாலச்சந்தர் தமிழில் தான் இயக்கிய “இரு கோடுகள்” திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கிக்கொண்டிருந்தாராம்.
அப்போது நாசரிடம், “நான் இப்போது ஒரு கன்னட படத்தை இயக்கி வருகிறேன். அந்த படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரம்தான் உங்களுக்கு கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் எல்லாம் படித்திருக்கிறீர்கள். சிறு கதாப்பாத்திரங்களில் எல்லாம் உங்களை எப்படி நடிக்க வைப்பது?” என கூறினாராம். தனக்கு இந்த படத்தில் வாய்ப்பில்லை என்று பாலச்சந்தர் சிம்பாளிக்காக கூறுகிறார் என்பதை புரிந்துகொண்டாராம் நாசர். எனினும் அதனை தொடர்ந்து பாலச்சந்தர் தான் இயக்கிய “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தில் நாசரை அறிமுகப்படுத்தினார்.