மைக் டைசனுக்கு குரல் கொடுக்கும் பிரபல தெலுங்கு நடிகர்... அட இவர் வேர்ல்டு பேமஸாச்சே
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு லைகர் என பெயர் வைத்துள்ளனர். தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜேடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் லைகர் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு வீரர் மைக் டைசன் நடிக்கிறார். மைக் டைசன் முதன் முறையாக நடிக்கும் முதல் இந்தியப் படமான லைகர் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லைகர் படத்தில் மைக் டைசனுக்கு தெலுங்கில் முன்னணி மற்றும் மூத்த நடிகரான பால கிருஷ்ணா தான் தெலுங்கு டப்பிங் கொடுக்கிறாராம். தெலுங்கு சினிமாவில் புகழ் உச்சியில் இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா, மைக் டைசனுக்கு குரல் கொடுக்க உள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் முதன் முதலில் அதுவும் இந்திய சினிமாவில் நடிப்பது திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.