சொல்லி அடித்த பாலகிருஷ்ணா... கோட்டை விட்ட மோகன்லால்...
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்து தமிழில் வெளியான படம் டாக்டர். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஹிட் படமாக அமைந்தது. ஆனால், ரஜினியின் அண்ணாத்த எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதில் ரஜினி கொஞ்சம் அப்செட்.
இதே நிலைமை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் சந்தித்துள்ளார். மலையாளத்தில் மெஹா ஹிட் படங்களை கொடுத்தவரும், சிறந்த இயக்குனருமான பிரியதர்ஷன் இயக்கியுள்ள சரித்திர திரைப்படம் ‘மரைக்கார் அரப்பிக்கலிண்டே சிம்ஹம்’. இப்படத்தில் ஹீரோவாக மோகன்லால் நடித்துள்ளார். மேலும் சுனில் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், மஞ்சு வாரியர், பிரபு, சுஹாசினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழில் அரப்பிக்கடல் சிங்கம் என்கிற தலைப்பில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு 67வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுவிட்டது. இப்படத்திற்கு ரூ.100 கோடி அளவில் முன்பதிவு நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக அதாவது ஒளிப்பதிவு, மேக்கிங், கலை ஆகிய பணிகள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் நன்றாக இல்லை என்கிற கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, முன்பதிவை தாண்டி இப்படம் பெரிய வசூலை பெறாது என கருதப்படுகிறது.
ஆனால், தெலுங்கில் வெளியான நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படம் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணா அகோரியாக நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படம் என்றால் லாஜிக் எல்லாம் இருக்காது. அவர் கையை காட்டினால் மழை நிற்கும். காலை தூக்கினால் கார் பறக்கும். அதுபோன்ற காட்சிகள் அகண்டாவிலும் இருக்கிறது. ஆனாலும் அவரின் ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல.
இப்படத்தை பொய்யாப்பட்டி ஸ்ரீனு இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பாலகிருஷ்ணாவுக்கு சிம்ஹா, லெஜண்ட் என இரு வெற்றிப்படங்களை கொடுத்தவர். இப்படம் கொரோனா ஊரடங்குக்கு பின் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது. இது ஆந்திர சினிமா உலகினரிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.