மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இது தான் செஞ்சுரி...! குளிருக்கு இதமான இந்த நேரத்தில் பார்க்க வேண்டிய படம்..!
மனம் ஒரு குரங்கு என்பார்கள். எப்போ எங்கே தாவும்னு நமக்கே தெரியாது. அது பாட்டுக்கு அது இஷ்டத்துக்குப் போயிக்கிட்டே இருக்கும். அதைக் கண்ட்ரோல் பண்றது அவ்வளவு சுலபமல்ல. அது ஒரு விசித்திர உலகம்.
ஒருவர் தன் வாழ்வில் கடந்து வந்த மனிதர்களை நிரந்தரமாகக் குடியமர்த்தியிருக்கும் பிரதேசம் இதுதான். அனுபவங்களின் நிழல்கள் நிரந்தரமாகப் படிந்திருக்கும். அந்த இருள் குகைக்குள் இளம் வயதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் பயங்கரமான உருவங்களாக அடியில் தங்கி விடும்.
மனதிற்கு எல்லையே கிடையாது. இதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இல்லாதவர்கள் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதை தான் பாலுமகேந்திராவின் மூடுபனி. 1980ல் வெளியானது.
இந்தப் படம் எங்கிருந்து எப்படி உருவானது என்பதை பாலுமகேந்திரா சொல்லும்போது, ஆல்பிரட் ஹிட்சாக்கின் சைக்கோ படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் தான் இந்தப் படத்தை எடுத்ததாகக் கூறினார்.
பிரதாப் போத்தன், ஷோபா, கல்கத்தா விஸ்வநாத், பானுச்சந்தர், மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் 100வது படம் இதுதான்.
பாலுமகேந்திரா இளையராஜாவைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். தன் முதல் படத்திலேயே இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். ஆனால் 3வது படத்தில் தான் அது நிறைவேறியுள்ளது. அதுதான் இந்த மூடுபனி என்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. பொதுவாகப் பாலுமகேந்திராவின் படங்களில் அடிக்கடி மௌனம் தென்படும். இதை உற்றுக்கவனித்தால் இதிலும் நமக்கு அர்த்தங்கள் கிடைக்கும். ஏன் இந்த மௌனம் என்பது நமக்கு அப்போதுதான் தெரியும்.
பருவகாலங்களின் கனவு என்று ஒரு மெல்லிசைப் பாடல் வருகிறது. இதற்கு எஸ்.ஜானகியும், மலேசியா வாசுதேவனும் உயிர் கொடுத்திருக்கிறார்கள். பைக்கின் முன் இருக்கையில் அமர்ந்து பைக் ஓட்டும் காதலனைக் கட்டியணைத்தபடி பாடுகிறாள் காதலி.
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் பைக்கின் வேகம், கட்டற்ற சுதந்திரத்துடன் துடிக்கும் மனதின் பாய்ச்சல் என பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது.
சித்தியின் கொடுமையால் அத்தனைப் பெண்களையும் வெறுக்கிறார் பிரதாப் போத்தன். அதைப் படத்தின் போக்கில் பின்னணியில் ஒலிக்கும் ஸ்விங் ஸ்விங் என்ற ஆங்கிலப் பாடல் உணர்த்துகிறது. இந்தப் பாடலில் வரும் கிட்டாரின் இசை நாயகனுக்குள் மறைந்துள்ள மிருகத்தைத் தட்டி எழுப்புகிறது.
அம்மா பொண்ணே ஆராரோ, என் இனிய பொன்நிலாவே ஆகிய பாடல்களும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன.
பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு ஷோபாவைக் கடத்தி வருகிறார் பிரதாப். தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுகிறார். உயிர் பயத்துடன் அங்கு தங்கியிருக்கும் ஷோபா, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக கிட்டாரும் கையுமாக இருக்கும் பிரதாப்புக்குப் பாட தெரியுமா என்று கேட்கிறார்.
அதுதான் இந்தப் பாடல்...என் இனிய பொன் நிலாவே..அற்புதமான பாடல். அதிலும் தொடருதே தினம் தினம் என்ற வரிகளைப் பாடும் போது ஜேசுதாஸின் குரலில் சந்தோஷக் குளிர் தரும் சிலிர்ப்பு தொனிப்பதை உணரலாம். அன்பைத் தேடி அலைபவர்களுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிக்கலாம்.