எம்.ஜி.ஆர் செய்த செயலில் வியந்துபோன பாங்காக் அரசு.. அவருக்காக என்ன செய்தது தெரியுமா?...
கற்றவருக்கு சென்றமிடமெல்லம் சிறப்பு என்பார்கள். அதேபோல் நல்ல பண்பும், மனிதாபிமானமும் உள்ளவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதை எம்.ஜி.ஆருக்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர் பொதுவாக சினிமா படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்தமாட்டார். அவரின் எல்லா படப்பிடிப்பும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா போன்ற இந்தியாவில் உள்ள மாநிலங்களில்தான் நடந்துள்ளது. ஆனால், அவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக அவர் பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது.
பாங்காக், ஜப்பான், டோக்கியோ என பல ஊர்களுக்கும் சென்று அப்படத்தை இயக்கினார் எம்.ஜி.ஆர். பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த எம்.ஜி.ஆர் அந்நாட்டு அரசிடம் 15 நாட்கள் அனுமதி கேட்டபோது அந்நாட்டு அரசு 10 நாட்கள் மட்டுமே அனுமதி கொடுத்தது. எனவே, 15 நாட்களில் எடுக்க வேண்டிய காட்சிகளை 10 நாட்களில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அவரும் அப்படியே காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு நடிகர் ஹெலிகாப்பட்டரில் தொங்கியபடி ஒரு சண்டைகாட்சியில் நடித்தபோது கீழே விழுந்து இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இதைக்கேட்டதும் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை மதியம் ஒரு மணிக்கு நிறுத்திவிட்டார். மேலும், படப்பிடிப்பு குழுவினரை அழைத்து சென்று அந்த நடிகருக்கு அஞ்சலியும் செலுத்தினார். மறுநாள் ‘இந்தியாவிலிருந்து எம்.ஜி.ஆர் என்கிற ஒரு நடிகர் நம் நாட்டிற்கு படப்பிடிப்பு நடத்த வந்துள்ளார். அவருக்கு 10 நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர் ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நம் நாட்டு நடிகருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்’ என அந்நாட்டு பத்திரிக்கைகள் எம்.ஜி.ஆரின் மனிதாபிமான செயலை பாராட்டி செய்திகள் வெளியிட்டது.
இதைக்கண்டு நெகிழ்ந்து போன அந்நாட்டு அதிகாரிகள் எம்.ஜி.ஆர் கேட்டபடி 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தனர்.
இதையும் படிங்க: தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் பிரபலம்..