எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..

பழம்பெரும் நடிகை பானுமதி வெறும் நடிகை மட்டுமல்ல. அவர் ஜோதிட நிபுணர். கைரேகை ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். அவர் எம்ஜிஆருக்கே கைரேகையைப் பார்த்து துல்லியமாகக் கணித்தாராம். அப்படி ஒரு சுவையான சம்பவத்தைப் பார்க்கலாம்.

பானுமதியிடம் ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் இப்படித் தான் சொல்வாராம். ஜாதகம் என்பது பொய் கிடையாது. அது கணிதம். சின்ன வயதில் இருந்தே ஈடுபாடு உண்டு. சூட்டிங் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஜோதிட நூல்களில் மூழ்கி விடுவேன். அதே சமயம் அதை முறைப்படியும் கற்றுக் கொண்டேன். சிவலிங்க வீரேசலிங்கம் என்ற ஒரு சித்த புருஷர் இருந்தார். அவரிடம்தான் ஜோதிடக்கலையைக் கற்றுக்கொண்டேன் என்கிறார்.

எம்ஜிஆரின் கைரேகையை எப்போது பார்த்தீர்கள்? என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு இப்படி சொல்லி இருக்கிறார். அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தேன். மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடந்தது. புதுமுகம் என்று சொல்லி எனக்கு எம்ஜிஆரை அறிமுகப்படுத்தினர்.

அவரது முகத்தில் ஒருவித காந்த சக்தியைக் கவனித்தேன். நடை, உடை, பாவனைகளில் நாகரிகம் தெரிந்தது. மரியாதை நிமித்தமாக என்னை அம்மா என்றே அழைப்பார். லைட் பாயைக் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்ட பின் தான் சாப்பிட உட்காருவார்.

Malaikallan

MK

இவர் போன ஜென்மத்தில் ஏதோ ஒரு தேசத்தில் மன்னராகவோ, இளவரசராகவோ தான் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒரு கம்பீரம். அது நடிப்பால் வருவதல்ல.

நானே எம்ஜிஆரின் அருகில் சென்று உங்களுக்கு கைரேகைப் பார்க்கிறேன் என்றேன். வேண்டாம் அம்மா. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்றார். சுற்றி உள்ளவர்கள் வற்புறுத்தவே, கையைக் காட்டினார். பானுமதி பார்த்ததும் இப்படித் தான் சொன்னாராம். ‘உங்களுக்கு பிற்காலத்துல பேரும் புகழும் வந்து சேரும். உலகமே கொண்டாடும் அளவு உன்னதத்தை அடைவீர்கள். ஆனால் சினிமாவால் அல்ல’ என்று சொன்னதும் எல்லோருமே கைதட்டினர்.

எம்ஜிஆரும் புன்னகையுடன் நன்றி அம்மா என கைகூப்பி வணங்கினார். அந்த நாளும் வந்தது. எம்ஜிஆர் தமிழக மக்களின் பேராதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். கலைத்துறை பாராட்டு விழா நடத்தியது.

அப்போது பேசிய எம்ஜிஆர், பானுமதியைப் பார்த்ததும் நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப் பார்த்து கணித்துச் சொன்னவர் பானுமதி அம்மையார். அவரது ஆரூடம் பலித்துவிட்டது என்றாராம். அரங்கம் முழுதும் கரகோஷத்தால் அதிர்ந்தது.

Related Articles
Next Story
Share it