பரத்தின் 50வது படம்னு போய் பார்த்தா.. அறுவை படமால்ல இருக்கு!.. லவ் விமர்சனம் இதோ!..

காதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பரத் தனது 50 வது படமான லவ் படத்தின் மூலம் மீண்டும் அந்த மேஜிக்கை செய்வார் என நம்பிப் போய் படத்தை பார்த்தால், சமீப காலமாக எப்படியொரு உப்புமா படத்தை கொடுத்து வந்தாரோ அதே போலத்தான் இன்னொரு உப்புமா படத்தை கொடுத்திருக்கிறார் பரத்.
இயக்குநர் ஆர்.பி. பாலா சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ள இந்த லவ் படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், நண்பர்களாக விவேக் பிரசன்னா மற்றும் பிக் பாஸ் டேனியல் நடித்துள்ளனர்.
வாணி போஜனின் அப்பாவாக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். குறைவான ஆட்களுடன் கம்மி பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி ஹிட் அடித்து விடலாம் என இயக்குநர் நினைத்தாலும், திரையில் அது எதிரொலிக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது.
இத்தனைக்கும் மலையாளத்தில் கடந்த 2020ல் இதே டைட்டிலில் வெளியான படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளனர். ஆனால், மனைவி இறந்த பின்னரும் கூட நடிகர் பரத்தின் முகத்தில் எந்தவொரு குற்ற உணர்ச்சியோ, பயமோ இருப்பது போன்று கூட நடிக்காமல் ஏதோ ஜாலியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடித்து விட்டு செல்வது போல நடித்துள்ளது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
லவ் பட விமர்சனம்:
பிசினஸில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பரத்தை காபி ஷாப்பில் பார்க்கும் போதே காதலித்து விடுகிறார் வாணி போஜன். ஆனால், லைஃப்பில் செட்டில் ஆகிவிட்ட பின்னர் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பரத் அட்வைஸ் பண்ண அதெல்லாம் முடியாது என அடம்பிடித்து அவரை திருமணம் செய்துக் கொள்கிறார்.
அதன் பின்னர், குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என பரத் தடுக்கிறார். அதற்கு வாணி போஜன் ஓகே சொல்ல, கட் பண்ணா ஒரு வருஷத்துக்கு பிறகு கர்ப்பத்தோடு வாணி போஜனை காட்டுகின்றனர். பரத் குடித்து விட்டு நினைத்தது எதுவுமே நடக்கவில்லையே என்கிற விரக்தியில் உள்ளார்.
ஒரு நாள் திடீரென இருவருக்கும் சண்டை வெடிக்கிறது. கோபத்தில் வாணி போஜனை தாக்க அவர் கீழே விழுந்து இறந்து விடுகிறார். அவரது உடலை அப்புறப்படுத்த நினைப்பதற்குள் வீட்டில் பிரச்சனை என விவேக் பிரசன்னாவும், கள்ளத்தொடர்பு வைத்து சிக்கிய பிரச்சனையில் மாட்டி டேனியும் இவரது வீட்டுக்கு வருகின்றனர்.
உடனடியாக பாத்ரூமில் பாடியை மறைத்து வைத்து விட்டு, நண்பர்களுக்கு அட்வைஸ் சொல்லி வருகிறார் பரத். இதற்கு நடுவே வாணி போஜனியின் தந்தையான ராதா ரவியும் ஒரு சீனில் வந்து உருக்கமாக பேசிவிட்டு செல்கிறார்.
அதன் பின்னர், வாணி போஜன் இறந்த விஷயம் இரு நண்பர்களுக்கும் தெரிந்து விட, அந்த உடலை அப்புறப்படுத்த நினைக்கின்றனர். அப்போது இன்னொரு காலிங் பெல் அடிக்கிறது. கதவை திறந்து பார்த்தால் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.
அது என்ன ட்விஸ்ட், ஏன் அப்படி நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லாமல் சொதப்பி எடுத்திருக்கிறார் இயக்குநர்.
நடிகர்களின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என மெனக்கெட வேண்டிய எல்லா இடத்திலும் கோட்டை விட்ட நிலையில், தான் கணவன், மனைவிக்கு இடையே உள்ள ஈகோ பிரச்சனையால் ஏற்படும் பிரச்சனைகள் பேச வந்து, டிராக் மாறி காதல் படத்தை ஹாரர் படமாக்கி அதையும் ஒழுங்கா செய்யாமல் மறுபடியும் பரத்துக்கு பல்பு கொடுத்துவிட்டனர்.
லவ் - டார்ச்சர்!
ரேட்டிங்: 2/5.