செல்வா ஒரு சேடிஸ்ட்… படத்தை பத்தி பேச விரும்பல… சீறும் பயில்வான்
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் எந்த வித புரோமோஷனும் இல்லாமல் இன்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “நானே வருவேன்’. இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுடன் இந்துஜா, எல்லி ஆவ்ரம், பிரபு, யோகி பாபு, சரவண சுப்பைய்யா என பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நானே வருவேன்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். கதிர், பிரபு என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். கதிராக வரும் தனுஷ் சிறுவயதிலேயே வித்தியாசமாக நடந்துகொள்கிறார். மேலும் ஒரு பெண்ணின் ஆடையையும் எரித்துவிடுகிறார்.
அதன் பின் ஒரு வேட்டைக்காரனாக வரும் செல்வராகவனிடம் கதிருக்கு பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க இரண்டு தனுஷ்களும் வளர்கின்றனர். பிரபுவாக வரும் தனுஷிற்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மூவரும் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள். இதனிடையே ஒரு நாள் பிரபுவாக வரும் தனுஷின் மகளுக்கு அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கின்றது. அதன் மூலம் கதிரை பற்றிய கதையும் அவர் செய்யும் கொடுமைகளும் பிரபுவுக்கு தெரியவருகிறது. பிரபு தனது மகளை காப்பாற்றினாரா? கதிரை அவர் என்ன செய்தார்? என்பதே “நானே வருவேன்” திரைப்படத்தின் கதை.
படத்தில் தனுஷின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். எனினும் படத்தின் முதல்பாதி கொடுத்த பரபரப்பை இரண்டாம்பாதி கொடுக்கவில்லை எனவும் விமர்சனங்கள் வருகின்றன. மேலும் ஓரளவு சுமாரான திரைப்படமாக “நானே வருவேன்” உருவாகியிருப்பதாகவும் கருத்துக்கள் வருகின்றன.
இந்த நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் “நானே வருவேன்” திரைப்படத்தை குறித்து பல காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் “செல்வராகவன் இதற்கு முன் சாணி காயிதம் என்ற மோசமான திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் அத்திரைப்படத்தில் இருந்து வெளிவரவில்லை. இன்னும் அவர் சேடிஸ்ட்டாக தான் இருக்கிறார்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “இந்த படத்திற்கு கலைப்புலி தாணு ஏன் விளம்பரம் செய்யவில்லை என்பது இந்த படத்தை பார்த்த பிறகு நன்றாக தெரிகிறது” என கேலியாக கூறியுள்ளார்.
“இது குழந்தை குட்டிகளோடு பார்க்கக்கூடிய படம் இல்லை. நல்ல படங்கள் எடுக்கவேண்டும் என்று செல்வராகவனுக்கு எண்ணமே வரவில்லை. இந்த படத்தை குழந்தையுடன் பார்க்க வந்தால் அந்த குழந்தைக்கு வெறிப்பிடித்துவிடும்” எனவும் தனது காட்டமான விமர்சனங்களை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.