வேற வழி இல்லாமதான் பொன்னியின் செல்வன் படத்தை இப்படி எடுத்தோம்.. - ஓப்பன் டாக் கொடுத்த மணிரத்னம்!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்திய திரைப்படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியால் நாவலாக எழுதப்பட்ட கதை பொன்னியின் செல்வன். பல வருடங்களாக பல பிரபலங்கள் அதை திரைப்படமாக்க முயற்சித்து வந்தனர்.
ஒரு வழியாக அதை படமாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம். போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதுக்குறித்து மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறும்போது ”பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவது மிகவும் சவாலான ஒரு விஷயம். எக்கச்சக்க கதாபாத்திரங்கள், ஏகப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் சுருக்கி படமாக்க வேண்டும். அதே சமயம் முக்கியமான எந்த விஷயத்தையும் நீக்கிவிட கூடாது.
இரண்டு பாகமாக எடுக்க முடிவு:
இதெல்லாம் போக அந்த படம் புத்தகம் படிக்காதவர்களுக்கும் புரிய வேண்டும். முதலில் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க நாங்கள் முடிவு செய்யவில்லை. படத்தை ஒரே பாகமாக எடுக்கவே நினைத்தோம்.
ஆனால் அவ்வளவு பெரிய கதையை ஒரே திரைப்படத்திற்குள் சுருக்கி எடுப்பது மிகவும் கடினம். எனவே வேறு வழியே இல்லாமல்தான் நாங்கள் அந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தோம்.
இரண்டு பாகங்களாக படத்தை எடுக்கும்போதுதான் சற்று நிதானமாக படக்கதையை கொண்டு போக முடிந்தது என மணிரத்னம் கூறியுள்ளார்.