வடிவேலுவை தொடர்ந்து உதயநிதி படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.....
தயாரிப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல்வாதியாகவும் மாறி உள்ளார். இந்நிலையில் சினிமாவிற்கும் முழுமையாக முழுக்கு போட்டு விட்டு அரசியலில் மட்டும் கவனம் செலுத்த உதயநிதி முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு இறுதியாக ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டும் என்பதால் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை படம் ஒன்றை எடுக்க இருந்தார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்க உள்ளார்.
ஆனால் இப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் அதற்கு முன்னர் உதயநிதி படத்தை இயக்க மாரி செல்வராஜ் முடிவு செய்து தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடவும் முடிவு செய்துள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
மலையாள நடிகரான பகத் பாசில் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது கமலின் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.