பூர்ணிமாவை கண்டுக்காமல் போன பாக்யராஜ்.. ‘இவ்வளவு கர்வமா இவருக்கு”… ஆனால் உண்மையான காரணம் தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க…

Bhagyaraj with Poornima
1980களில் தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த பூர்ணிமா, பிரபல இயக்குனரான பாக்யராஜ்ஜின் மனைவி என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் பாக்யராஜ்ஜை தான் முதன் முதலில் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் பூர்ணிமா.

Bhagyaraj with Poornima
பாக்யராஜ்ஜை பார்க்கனும்…
பூர்ணிமா தொடக்கத்தில் தமிழ் படங்களை விட மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார். ஆதலால் பாக்யராஜ்ஜை குறித்து அவர் அவ்வளவாக கேள்விப்படவில்லை. அந்த சமயத்தில் ஒரு மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் அசோக் குமார் “தமிழில் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நான் பணியாற்றப்போகிறேன். படம் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.
இதனை கேட்ட பூர்ணிமா “அத்திரைப்படத்திற்கு என்னுடைய பெயரை பரிந்துரை செய்யுங்கள்” என கூறினாராம். அதற்கு அசோக் குமார் “பார்க்கலாம்” என்று மட்டும் கூறியிருக்கிறார்.

Poornima
இதனை தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு விழாவில் நடிகை அம்பிகாவை பூர்ணிமா சந்தித்திருக்கிறார். அந்த சமயத்தில் பாக்யராஜ்ஜும் அம்பிகாவும் நடித்திருந்த “அந்த 7 நாட்கள்” திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது பாக்யராஜ்ஜை புகழ்ந்து பேசியுள்ளார் அம்பிகா.
பாக்யராஜ் என்ற பெயரை கேட்டதும், இதற்கு முன் அசோக் குமாரும் இந்த பெயரை குறிப்பிட்டிருந்தது ஞாபகம் வந்திருக்கிறது. அந்த நிமிடமே பாக்யராஜ்ஜை நேரில் சந்திக்க வேண்டும் எனவும், அவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் எனவும் முடிவு எடுத்துவிட்டாராம் பூர்ணிமா.
முதல் சந்திப்பு
சில நாட்களுக்கு பிறகு ஒரு திரையரங்கில் பாக்யராஜ்ஜை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது பூர்ணிமா, பாக்யராஜ்ஜிடம் ஓடிச்சென்று “சார், நான் உங்களோட பெரிய ரசிகை சார், உங்க படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என ஆங்கிலத்தில் வேகமாக கூறியிருக்கிறார். பூர்ணிமா மும்பையை சேர்ந்தவர் என்பதால் அந்த காலகட்டத்தில் அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது.

Bhagyaraj
கண்டுக்காமல் சென்ற பாக்யராஜ்
பூர்ணிமா இவ்வாறு பாக்யராஜ்ஜை பார்த்து ஆங்கிலத்தில் வேகமாக பேசியவுடன், ஒரு வார்த்தை கூட பேசாமல் பாக்யராஜ் சென்றுவிட்டாராம். பாக்யராஜ் இவ்வாறு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது பூர்ணிமாவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. “இவர் என்ன இவ்வளவு கர்வமாக இருக்கிறார். நானும் ஒரு நடிகைதானே. ஒரு வார்த்தை கூட பேசாமல் போகிறாரே. இப்படி ஒரு கர்வமான ஆளின் படத்தில் எப்படி நடிக்க முடியும்” என மனதுக்குள் திட்டினாராம்.
இங்கிலீஷ் தெரியாதும்மா..
இந்த சம்பவம் நடந்த பிறகு பாக்யராஜ் இயக்க இருந்த “டார்லிங் டார்லிங் டார்லிங்” திரைப்படத்தில் நடிக்க பூர்ணிமாவுக்கு வாய்ப்பு வந்தது. அப்போது அவரை சந்தித்தபோது பாக்யராஜ் நன்றாக பேசினாராம்.
அந்த நேரத்தில் சில நாட்களுக்கு முன் திரையரங்கில் நடந்த சம்பவத்தை குறித்து கேட்டாராம் பூர்ணிமா. “சார், இப்போ நீங்க இவ்வளவு நல்லா பேசுறீங்களே. அன்னைக்கு தியேட்டர்ல பாத்தப்போ ஏன் கண்டுக்காமல் சென்றீர்கள்?” என கேட்டார்.

Bhagyaraj and Poornima Bhagyaraj
அப்போது பாக்யராஜ் அந்த சம்பவத்தை நினைவுப் படுத்தி “ஓ, அந்த சம்பவமா? நீங்கபாட்டுக்கு வந்து இங்கிலிஷ்ல பேசிட்டு இருந்தீங்க. எனக்கு இங்கிலீஷ் சுத்தமா வராது. எதாவது பேசப்போய் அசிங்கப்பட்டு போய்விடுவோமோ என நினைத்துதான் நான் அப்படி சென்றுவிட்டேன்” என பதில் கூறினாராம்.