Cinema News
நண்பர்களுக்குள் எழுந்த சிக்கல்… இயக்குனரே இல்லாமல் வெளியான பாக்யராஜ் திரைப்படம்… என்னப்பா சொல்றீங்க??
ஒரு திரைப்படம் பலரின் கூட்டுமுயற்சியால்தான் உருவாகிறது என்றாலும் அந்த படக்குழுவிற்கு கேப்டனாக திகழ்பவர் இயக்குனர்தான். இயக்குனர் இல்லை என்றால் அந்த படமே இல்லை.
இந்த நிலையில் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம், இயக்குனரின் பெயரே இல்லாமல் வெளிவந்திருக்கிறது. ஆம்!
கே.பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் பாரதிராஜா இயக்கிய “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் வசனங்களை எழுதியவரும் பாக்யராஜ்தான். இதனை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில்தான் பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து “சுவரில்லா சித்திரங்கள்”, “ஒரு கை ஓசை”, “இன்று போய் நாளை வா”, “அந்த 7 நாட்கள்” என பல திரைப்படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார் பாக்யராஜ். குறிப்பாக இவரின் திரைக்கதை மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. திரைக்கதை மன்னன் என்று கூட பாக்யராஜ்ஜை அழைப்பார்கள்.
பாக்யராஜ் டாப் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்த அந்த காலகட்டத்தில் ஒரு நாள் ஜி. ராமகிருஷ்ணன் என்ற இயக்குனர் பாக்யராஜ்ஜை சந்திக்க வந்தார். பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு முன்பு ஜி.ராமகிருஷ்ணனிடம் சில காலம் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாக்யராஜ்ஜை சந்தித்த ராமகிருஷ்ணன், தனது நண்பர் ஒருவர் ஒரு திரைப்படம் தயாரிக்கப்போகிறார் எனவும் அதற்கு பாக்யராஜ் கதை எழுதி, நடித்தும் தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்கு பாக்யராஜ்ஜும் ஒப்புக்கொண்டார். அத்திரைப்படத்திற்கு “பொய் சாட்சி” என்று டைட்டில் வைக்கப்பட்டது.
இத்திரைப்படத்தை ஜி.ராமகிருஷ்ணன்தான் இயக்கினார். ஆனால் சில காட்சிகளை பாக்யராஜ்ஜும் இயக்கினார். ஜி.ராமகிருஷ்ணனின் நண்பரான இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், பாக்யராஜ்ஜின் அமோக புகழையும் வியாபாரத்தையும் கருத்தில்கொண்டு, டைரக்சன் என்ற பெயரில் பாக்யராஜ்ஜின் பெயரை மட்டும் போட்டுவிடலாம், ராமகிருஷ்ணனின் பெயரை போட வேண்டாம் என முடிவெடுத்தாராம்.
பாக்யராஜ் சில காட்சிகளை இயக்கியிருந்தாலும், தயாரிப்பாளரின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம். ஆதலால் இத்திரைப்படம் வெளியானபோது இயக்குனர் பெயரே இல்லாமல் வெளியானதாம். இந்த தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.